Published on 21 Apr 2026
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.
மழை காலத்தால் பெய்யாது, பொய்க்குமானால், கடலால் சூழப்பட்டுள்ள இப்பரந்த உலகினுள் பசி நிலைபெற்று உயிர்களை வாட்டும்
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.
‘மழை’ என்னும் வருவாயின் வளம் குறைந்ததனால், பயிர் செய்யும் உழவரும் (விளை பொருள்களை விளைவிக்க) ஏரால் உழுதலைச் செய்யமாட்டார்கள்
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.
மேகத்திலிருந்து மழைத்துளி விழாது போனால், பசும்புல்லின் நுனியைக்கூட இங்கே காண்பது அரிதாகிவிடும்
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.
மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்.
(அதுபோல, நமது மண் வளம், நீர் வளம், நில வளம், மலை வளம் இவற்றில் இருந்து பெறப்படும் வளங்களில் நாம் பயன்பெறாமல், யாரோ அல்லது வேறு நாடோ பயன்பெருமானால், நம் நிலத்தின் வளம் குன்றிப்போகும்)
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.
எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும். (திருட்டு, கொள்ளை அதிகரிக்கும்)
-----------
புறநானூறு 18
குடபுலவியனார் (குடபுலத்து வாழ்ந்தவர்; இயம் முழக்குபவர்)
பாண்டியன் அறிவுடை நம்பிக்குக் கூறும்
முதுமொழி என்னும் உலகியல் செய்தி கூறும் பாடல் இது.
கடலால் சூழப்பட்டுப் பரந்துகிடக்கும் உலகை
முயற்சி வலிமையால் தனதாக்கிக்கொண்டு
புகழை நிலைநாட்டிய திறனாளிகளில்
யானை போன்றவனே!
ஒன்று பத்து என்று கோடி வரை அடுக்கிய
பெருமை உடையதாக உன் வாழ்நாள் அமையட்டும்.
வளமான மூதூரின் (மதுரை) வெற்றி-வேந்தே!
நீரில் தாழ்ந்திருக்கும் காஞ்சிப் பூவை வாளைமீன் கவ்வுதலும்,
ஆரல், வரால், செந்நிறக் கெடிறு மீன்கள் வளர்வதுமான அகழியும்,
வான் தோயும் மதிலும் கொண்டது உன் வளநகர்.
இறந்தபின் செல்லும் உலகத்துச் செல்வத்தை விரும்பினாலும்,
அரசர்களையெல்லாம் வென்று
தனியொருவனாகச் சிறப்புப் பெற விரும்பினாலும்,
சிறந்த உலகின் புகழை நிலைநிறுத்திக்கொள்ள விரும்பினாலும்
ஒரு தகுதி வேண்டும்.
அதைச் சொல்கிறேன் கேள்!
அதற்குத் தகுதி உள்ளவன் நீ.
உடம்பு நீர் இல்லாமல் வாழமுடியாது.
உடம்புக்கு உணவு வழங்கியவர் உயிர் தந்தவராக மதிக்கப்படுவர்.
உடம்பு உணவின் பிண்டம்.
உணவு என்பது நிலம் நீர் ஆகியவற்றின் கொடை.
நீரையும் திலத்தையும் சேர்த்து வைத்தவர்
உடம்பையும் உயிரையும் படைத்தவர் ஆவார்.
விதைத்துவிட்டு வான்மழையை எதிர்நோக்கும்
புன்செய் நிலமாயின் அரசன் முயற்சிக்குப் பயன்படாது.
அதனால்…
போரை விரும்பும் செழியனே!
நான் சொல்வதை ஏளனம் செய்யாமல்
நிலம் நெளிந்து பள்ளமாய்க் கிடக்கும் இடங்களிலெல்லாம்
நீர்நிலை பெருகும்படி
தடுத்து நிறுத்தியவர்
இவ்வுலகில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர் ஆவர்.
அவ்வாறு நீரைத் தடுத்து நிறுத்தாதவர்
இவ்வுலகில் பதியாதவர் ஆவார்.
நீ நீர்நிலைகளைப் பெருகச் செய்து
உன்னை இவ் உலகில் நிலைநிறுத்திக்கொள்க!
முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப்
பரந்துபட்ட வியல் ஞாலம்
தாளின் தந்து, தம் புகழ் நிறீஇ,
ஒரு தாம் ஆகிய உரவோர் உம்பல்!
ஒன்று பத்து அடுக்கிய கோடி கடை இரீஇய
பெருமைத்தாக, நின் ஆயுள்தானே!
நீர்த் தாழ்ந்த குறுங் காஞ்சிப்
பூக் கதூஉம் இன வாளை,
நுண் ஆரல், பரு வரால்,
குரூஉக் கெடிற்ற, குண்டு அகழி;
வான் உட்கும் வடி நீள் மதில்;
மல்லல் மூதூர் வய வேந்தே!
செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும்,
ஞாலம் காவலர் தோள் வலி முருக்கி,
ஒரு நீ ஆகல் வேண்டினும், சிறந்த
நல் இசை நிறுத்தல் வேண்டினும், மற்று அதன்
தகுதி கேள், இனி, மிகுதியாள!
நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே;
உண்டி முதற்றே உணவின் பிண்டம்;
உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே;
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசினோரே;
வித்தி வான் நோக்கும் புன் புலம் கண் அகன்
வைப்பிற்று ஆயினும், நண்ணி ஆளும்
இறைவன் தாட்கு உதவாதே; அதனால்,
அடு போர்ச் செழிய! இகழாது வல்லே
நிலன் நெளி மருங்கில் நீர் நிலை பெருகத்
தட்டோர் அம்ம, இவண் தட்டோரே;
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே.
---------------
நிறை கடல் முகந்து உராய், நிறைந்து, நீர் துளும்பும் தம்
பொறை தவிர்பு அசைவிடப் பொழிந்தன்று, வானம்;
நிலம் மறைவது போல் மலிர் புனல் தலைத் தலைஇ,
மலைய இனம் கலங்க, மலைய மயில் அகவ,
மலை மாசு கழியக் கதழும் அருவி இழியும்
வையை ஆற்றில் வெள்ளம் வந்தது.
மழை பொழிந்தது. கடலில் நீரை முகந்து சென்ற மேகம் உரசும்போது, தன்னிடமுள்ள நீர் தளும்பித் தாங்கமாட்டாமல் மழையாகப் பொழிந்தது.
புனல்
நிலம் மறைவது போல ஓடியது. மலையில் வாழ்வன கலங்கும்படியும், மயில் அகவிக் கூவும்படியும் ஒடியது. மலையின் மாசுகளைக் கழுவிக்கொண்டு அருவியாக இறங்கியது. மலையில் ஆங்காங்கே நீர் வடிந்தது.
------------
திரை இரும் பனிப் பௌவம் செவ்விதா அற முகந்து,
உர உரும் உடன்று ஆர்ப்ப, ஊர் பொறை கொள்ளாது,
கரை உடை குளமெனக் கழன்று, வான் வயிறு அழிபு,
வரைவரை தொடுத்த வயங்கு வெள் அருவி
விளக்கம்
அலை மோதும் குளிந்த கடலில் செவ்விய முறையில் நீரை முகந்துகொண்டு மேலே சென்ற மேகம், இடி முழங்கி, நீரைத் தாங்கிக்கொண்டு செல்லமாட்டாமல், கரை உடைந்த குளம் போல, வானத்து வயிறு கிழியும்படி மழையாகப் பொழிந்து கொட்டியது.
---------
Leonardo da Vinci
“Water is the driving force of all nature.”
“இயற்கையின் அனைத்தையும் இயக்கும் சக்தி நீரே.”