Published on 30 Apr 2026
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
மழை பெய்வதனாலேதான் உலக உயிர்கள் வாழ்கின்றன; ஆதலால், மழையே உயிர்களுக்கு ‘அமிழ்தம்’ என்று உணரத்தகும்
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
உண்பவர்க்குத் தகுந்த பொருள்களை விளை வித்துத் தந்து அவற்றைப் பருகுவார்க்குத் தானும் ஓர் உணவாக (பருகும் நீராக) விளங்குவதும் மழையே ஆகும்
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.
மழை காலத்தால் பெய்யாது, பொய்க்குமானால், கடலால் சூழப்பட்டுள்ள இப்பரந்த உலகினுள் பசி நிலைபெற்று உயிர்களை வாட்டும்
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.
‘மழை’ என்னும் வருவாயின் வளம் குறைந்ததனால், பயிர் செய்யும் உழவரும் (விளை பொருள்களை விளைவிக்க) ஏரால் உழுதலைச் செய்யமாட்டார்கள்
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
காலத்தால் பெய்யாது உலகில் வாழும் உயிர்களைக் கெடுப்பதும் மழை; அப்படி கெட்டவற்றைப் பெய்து வாழச் செய்வதும் மழையே ஆகும்
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.
வானிலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகில், பசும்புல்லின் தலையைக் காண்பதுங் கூட அருமையாகி விடும்
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.
மேகமானது கடல் நீரை முகந்து சென்று மீண்டும், மழையாகப் பெய்யாவிட்டால் அப்பெரிய கடலும் தன் வளமையில் குறைந்து போகும்
(அதுபோல, நமது மண் வளம், நீர் வளம், நில வளம், மலை வளம் இவற்றில் இருந்து பெறப்படும் வளங்களில் நாம் பயன்பெறாமல், யாரோ அல்லது வேறு நாடோ பயன்பெருமானால், நம் நிலத்தின் வளம் குன்றிப்போகும்)
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
மழையானது முறையாகப் பெய்யாவிட்டால், உலகத்திலே, வானோர்க்காக நடத்தப்படும் திருவிழாக்களும், பூசனைகளும் நடைபெறமாட்டா
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.
மழை பெய்து உதவாவிட்டால், இந்தப் பரந்த உலகத்திலே பிறருக்காகச் செய்யப்படும் தானமும், தனக்காக மேற்கொள்ளும் தவமும் இரண்டுமே நிலையாமற் போய்விடும்
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.
நீர் இல்லாமல் எத்தகையோருக்கும் உலக வாழ்க்கை அமையாது என்றால், மழை இல்லாமல் ஒழுக்கமும் நிலைபெறாது