Published on 23 Apr 2026
அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்.
தீய வழிகளால் அல்லாமல், பொருள் தேடும் திறனை அறிந்து தேடியதனால் வந்தடைந்த செல்வமானது, அறவாழ்க்கையையும், இன்பத்தையும் ஒருங்கே கொடுப்பது ஆகும்
-------
குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை.
தன் கைப்பொருள் ஒன்று தன்னிடம் இருக்க அதைக் கொண்டு ஒருவன் செயல் செய்தால், மலையின் மேல் ஏறி யானைப் போரைக் கண்டாற் போன்றது.
---------
செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில்.
எதையும் சாதிக்க எண்ணுவோர் பணத்தைச் சம்பாதியுங்கள்; பகைவரின் அகங்காரத்தை அறுக்கும் கூரிய ஆயுதம், பணத்தைவிட வேறு இல்லை.
(மனிதவளம் - human capital (young labour force), இந்தியாவில் மிக அதிகம், அதனை பயன்படுத்தி பொருளாதார வளத்தை பெருகவேண்டும்)
-------
கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு.
மேல் நடப்பதைப் பற்றி கருதாமல், முறை தவறி அரசாளுகின்ற மன்னவன், தன் பொருள் வளத்தையும், நாட்டு மக்களது அன்பையும், ஒருங்கே இழந்து விடுவான்
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.
கொடுங்கோல் ஆட்சியால் அல்லல்பட்ட மக்கள், அதைப் பொறுக்கமாட்டாது அழுத கண்ணீரே, ஓர் அரசனின் செல்வத்தை அழிக்கும் படை ஆகும்
இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.
பொருள் வருவாய்க்கான வழிகளை உண்டாக்கலும், வரும் பொருளைச் சேமித்தலும், பாதுகாத்தலும், நாட்டின் நலத்துக்குத் தக்கபடி செலவிடுதலும் வல்லதே அரசு
வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.
அரசன் குடிகளிடம் முறை கடந்து பொருளைக் கேட்பது, கையிலே வேலோடு நிற்கும் கள்வன், ‘எல்லாவற்றையும் தந்துவிடு’ என்று கேட்பதைப் போன்றதாகும்
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.
நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும், அந்தணரும் அறநூல்களை மறப்பர்.
-----------------
மகத்தான இந்தியக் கவிஞர் Kalidasa (கி.பி. 500) தனது மகாகாவியமான Raghuvamsham (1-18) இல் கூறுகிறார்:
“மன்னர் திலீபன் தனது குடிமக்களிடமிருந்து அவர்களின் வருமானத்தின் 1/6 பகுதியை மட்டும் அரசின் நலனுக்காக வரியாக வசூலிக்கிறார்; அது சூரியன் பூமியிலிருந்து நீர்த்துளிகளை எடுத்துக்கொண்டு, பின்னர் பல மடங்கு மழைத்துளிகளாக திருப்பி வழங்குவது போன்றது…”
அதேபோல், Chanakya தனது புகழ்பெற்ற நூலான Arthashastra இல் ஆட்சியாளர்களுக்கு அறிவுறுத்துகிறார்:
“தேனீக்கள் மலர்களிலிருந்து தேனை எடுப்பதுபோல், குடிமக்களிடமிருந்து வரிகளை மெதுவாகவும், அவர்களுக்கு எந்தத் துன்பமும் ஏற்படாத வகையிலும் வசூலிக்க வேண்டும்…”
-------------------
அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்.
தீய வழிகளால் அல்லாமல், பொருள் தேடும் திறனை அறிந்து தேடியதனால் வந்தடைந்த செல்வமானது, அறவாழ்க்கையையும், இன்பத்தையும் ஒருங்கே கொடுப்பது ஆகும். மதுக்கடைகளை திறந்து, பலர் குடிகளை கெடுத்து வரும் செல்வம் தேவையில்லை, அது இன்பத்தை தராது.
--------------------
மூவேந்தர் ஆட்சியில்
உன் அரசே
‘அரசு’ எனப் போற்றுதலுக்கு உரியது.
நாடு எனப் போற்றப்படுவது உன் காவிரி நாடே.
என்றாலும் ஒன்று கூற விரும்புகிறேன்.
உன்னிடம் முறை வேண்டும்போது
எளிமையாகக் காட்சி தந்து
சரியான தீர்ப்பைப் பெற்றால்
மழை விரும்பும்போது மழையைப் பெற்றது போன்று
மக்கள் மகிழ்வர்.
உன் குடை உனக்கு வெயிலை மறைக்க அன்று.
குடிமக்களின் துயரைப் போக்கி
அவர்களுக்கு நிழல் தருவதற்காகவே.
உன் கொற்றம் உழவரின் உழவுப் படையால் விளைந்தது.
மழை பொய்த்தாலும்
வருவாய் குறைந்தாலும்
இயற்கை அல்லாத செயற்கை தோன்றினாலும்
உலகம் அதனைக் காக்கும் அரசனைத்தான் பழிக்கும்.
இதனைப் புரிந்துகொண்டு
உனக்கு வேண்டியவர்களின் சொல்லைக் கேளாமல்
காளை மாடுகளை போற்றி உழவு செய்யும்
குடிகளின் சுமையை நீ குறைத்து
அவர்களைப் பேணினால்
அடங்காத உன் பகைவர் உன்னிடம் அடிபணிவர்.
இப்படிப் பாடக் கேட்ட அரசன்
புலவரின் நிலவரியைத்
தள்ளுபடி செய்தான்
நளி இரு முந்நீர் ஏணி ஆக,
வளி இடை வழங்கா வானம் சூடிய
மண் திணி கிடக்கைத் தண் தமிழ்க் கிழவர்,
முரசு முழங்கு தானை மூவருள்ளும்,
அரசு எனப்படுவது நினதே, பெரும!
அலங்குகதிர்க் கனலி நால்வயின் தோன்றினும்,
இலங்குகதிர் வெள்ளி தென் புலம் படரினும்,
அம் தண் காவிரி வந்து கவர்பு ஊட்ட,
தோடு கொள் வேலின் தோற்றம் போல,
ஆடு கண் கரும்பின் வெண் பூ நுடங்கும்
நாடு எனப்படுவது நினதே அத்தை; ஆங்க
நாடு கெழு செல்வத்துப் பீடு கெழு வேந்தே!
நினவ கூறுவல்; எனவ கேண்மதி!
அறம் புரிந்தன்ன செங்கோல் நாட்டத்து
முறை வேண்டு பொழுதில் பதன் எளியோர் ஈண்டு
உறை வேண்டு பொழுதில் பெயல் பெற்றோரே;
ஞாயிறு சுமந்த கோடு திரள் கொண்மூ
மாக விசும்பின் நடுவு நின்றாங்கு,
கண் பொர விளங்கு நின் விண் பொரு வியன்குடை
வெயில் மறைக் கொண்டன்றோ? அன்றே; வருந்திய
குடி மறைப்பதுவே; கூர்வேல் வளவ!
வெளிற்றுப் பனந் துணியின் வீற்றுவீற்றுக் கிடப்ப,
களிற்றுக் கணம் பொருத கண் அகன் பறந்தலை,
வருபடை தாங்கி, பெயர் புறத்து ஆர்த்து,
பொருபடை தரூஉம் கொற்றமும் உழுபடை
ஊன்று சால் மருங்கின் ஈன்றதன் பயனே;
மாரி பொய்ப்பினும், வாரி குன்றினும்,
இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும்,
காவலர்ப் பழிக்கும், இக் கண் அகல் ஞாலம்;
அது நற்கு அறிந்தனைஆயின், நீயும்
நொதுமலாளர் பொதுமொழி கொள்ளாது,
பகடு புறந்தருநர் பாரம் ஓம்பி,
குடி புறந்தருகுவை ஆயின், நின்
அடி புறந்தருகுவர், அடங்காதோரே.