Published on 18 Apr 2026
வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடி உயரக் கோல் உயரும்
கோல் உயரக் கோன் உயர்வான்
-ஒளவையார்
விளக்கம்
விவசாய நிலத்தின் வரப்பை உயர்த்தினால் நீர் வயலில் அதிக அளவில் தங்கும். நீர் நிறைய தங்கினால் நெல் விளைச்சல் உயரும். நெல் விளைச்சல் நன்றாக இருந்தால் மக்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். எங்கே மக்கள் வறுமையின்றி மகிழ்ச்சியாக இருக்கிறார்களோ அந்த அரசே சிறப்பான அரசாங்கமாக விளங்கும். அப்படி சிறந்த அரசை ஆளும் மன்னன் மிக உயர்ந்தவனாக போற்றப்பட்டும் மிகுந்த நற்பெயர் பெறுவான் என்றும் ஒளவைப் பாட்டி விளக்குகிறார்.
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.
உழவின் வருத்தத்தைக் கண்டு, பிற தொழில்களைச் செய்து திரிந்தாலும், முடிவில் ஏருடையவரையே உலகம் உணவுக்கு எதிர்பார்த்தலால், உழவே மிகவும் சிறந்தது.
“Seeing the hardships of farming, people may turn to other occupations; yet in the end, since the world depends on the farmer for its food, agriculture remains the noblest and most important of all professions.”
---------------------------------------------------------------
விவசாய கூட்டுறவு சங்கம் (NCERT 12th Standard)
விவசாயிகள் ஒரு குழுவாக இணைந்து, மிகவும் திறமையான மற்றும் லாபகரமான விவசாயத்தை மேற்கொள்ளும் பொருட்டு, தங்கள் வளங்களைச் சுயமாகத் திரட்டி ஒரு கூட்டுறவுச் சங்கத்தை உருவாக்குகின்றனர். இதில் தனிப்பட்ட விவசாயப் பண்ணைகள் அப்படியே நீடிக்கின்றன; அதேவேளையில், விவசாயச் செயல்பாடு என்பது ஒரு கூட்டுறவு முயற்சியாக அமைகிறது.
கூட்டுறவு சங்கங்கள் விவசாயிகளுக்கு விவசாயத்திற்குத் தேவையான அனைத்து முக்கிய உள்ளீடுகளையும் பெற உதவுகின்றன, அவர்களது பொருட்களை மிகவும் சாதகமான விலை மற்றும் நிபந்தனைகளில் விற்க உதவுகின்றன, மேலும் தரமான பொருட்களை மலிவான விலையில் செயலாக்கவும் உதவி புரிகின்றன.
மேற்கு ஐரோப்பிய நாடுகளான டென்மார்க், நெதர்லாந்து, பெல்ஜியம், ஸ்வீடன், இத்தாலி போன்ற பல நாடுகளில் கூட்டுறவு இயக்கம் மிகவும் வெற்றிகரமாக உள்ளது. குறிப்பாக டென்மார்க் நாட்டில், இந்த இயக்கம் மிகுந்த வெற்றி பெற்றதால், அங்கு ஒவ்வொரு விவசாயியும் கூட்டுறவு அமைப்பின் உறுப்பினராக உள்ளார்.
-----------------------------------------------------------------
மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் விவசாயச் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
_______________________________________
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.
உழவை விட்டுப் பிற தொழில்களைச் செய்வாருக்கும் உணவுப் பொருள்களைத் தந்து தாங்குவதனால், உழுதொழில் செய்வாரே உலகத்தாருக்கு அச்சாணி ஆவார் .
“Since they provide food and sustain even those who engage in other occupations apart from farming, the farmers are the very linchpin (foundation) of the world.”
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.
யாவரும் உண்ணுவதற்கு உணவைத் தந்து, தாமும் உண்டு வாழ்பவரே உரிமை வாழ்வினர்; மற்றையவர் பிறரைத் தொழுது உண்டு, அவர் பின் செல்கின்றவரே யாவர்.
பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்.
உழுதலால் நெல்லுடையவரான கருணையாளர், பலவேந்தர் குடைநிழலது ஆகிய உலகம் முழுவதையும், தம் அரசனின் குடைக்கீழ் வந்து சேரக் காணும் சக்தியுடையவர் ஆவர்
இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்.
உழவரான முயற்சியைச் செய்து உண்பதனையே இயல்பாக உடையவர், பிறரைத் தாம் இரவார்; தம்பால் வந்து இரப்பவர்க்கும் அவர் வேண்டியதைத் தருவார்கள்.
ஆனால் எங்களுக்கு சோறுபோடும் என்னுடைய தாய் தந்தையர்கள் 1000 துக்கும் 2000 துக்கும் விலைபோகும்போது எங்களுக்குள் ஒரு வலி வரும்பாரு...அதை எங்களால் சொல்லமுடியவில்லை.
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை.
உழவர்களின் கை உழாது மடங்கிவிடுமானால், ‘யாவரும் விரும்பும் உண்வையும் கைவிட்டோம்’ என்று துறந்தவர்க்கும், அவ்வறத்தில் நிலைத்து நிற்க முடியாது.
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும். (களைக்கொல்லி உபயோகிப்பாளருக்கு)
ஒரு பலப் புழுதியானது காற்பலமாக ஆகும்படி உழுது காய விடுவானானால், அதனிடம் செய்த பயிர், ஒரு பிடி எருவு இடுதலையும் வேண்டாமலே நன்றாக விளையும்.
ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு.
பலகால் உழுதலினும், எருப்பெய்து வளப்படுத்துதல் சிறந்தது; இவ்விரண்டும் செய்து களையும் எடுத்தபின், பயிரைக் காத்தல், நீர் பாய்ச்சுவதிலும் நல்லதாகும்
செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்.
நிலத்திற்கு உரியவன் நாளும் நிலத்திற்குச் சென்று செய்ய வேண்டியதைச் செய்யாது சோம்பி இருந்தால், கடமை ஆற்றாத கணவனை முதலில் மனத்தால் வெறுத்துப் பின் அவனோடு ஊடி விடும் மனைவியைப் போல நிலமும் முதலில் வாடிப் பிறகு பலன் தராமல் போய்விடும்.
இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்.
நிலமகள் என்னும் நல்ல பெண், நாம் ஏதும் இல்லாத ஏழை என்று சோம்பி இருப்பவரைக் கண்டால் தனக்குள் ஏளனமாய்ச் சிரிப்பாள்.
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.
தன் முயற்சியினாலே ஒருவன் சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்களுக்கு உதவி செய்வதற்காகவே தன்னிடம் சேர்ந்தது என்று எண்ணல் வேண்டும். இப்படி நினைப்பவன் உழவாளனாகதான் இருக்கமுடியும்
-----------
மூவேந்தர் ஆட்சியில்
உன் அரசே
‘அரசு’ எனப் போற்றுதலுக்கு உரியது.
நாடு எனப் போற்றப்படுவது உன் காவிரி நாடே.
என்றாலும் ஒன்று கூற விரும்புகிறேன்.
உன்னிடம் முறை வேண்டும்போது
எளிமையாகக் காட்சி தந்து
சரியான தீர்ப்பைப் பெற்றால்
மழை விரும்பும்போது மழையைப் பெற்றது போன்று
மக்கள் மகிழ்வர்.
உன் குடை உனக்கு வெயிலை மறைக்க அன்று.
குடிமக்களின் துயரைப் போக்கி
அவர்களுக்கு நிழல் தருவதற்காகவே.
உன் கொற்றம் உழவரின் உழவுப் படையால் விளைந்தது.
மழை பொய்த்தாலும்
வருவாய் குறைந்தாலும்
இயற்கை அல்லாத செயற்கை தோன்றினாலும்
உலகம் அதனைக் காக்கும் அரசனைத்தான் பழிக்கும்.
இதனைப் புரிந்துகொண்டு
உனக்கு வேண்டியவர்களின் சொல்லைக் கேளாமல்
காளை மாடுகளை போற்றி உழவு செய்யும்
குடிகளின் சுமையை நீ குறைத்து
அவர்களைப் பேணினால்
அடங்காத உன் பகைவர் உன்னிடம் அடிபணிவர்.
இப்படிப் பாடக் கேட்ட அரசன்
புலவரின் நிலவரியைத்
தள்ளுபடி செய்தான்
நளி இரு முந்நீர் ஏணி ஆக,
வளி இடை வழங்கா வானம் சூடிய
மண் திணி கிடக்கைத் தண் தமிழ்க் கிழவர்,
முரசு முழங்கு தானை மூவருள்ளும்,
அரசு எனப்படுவது நினதே, பெரும!
அலங்குகதிர்க் கனலி நால்வயின் தோன்றினும்,
இலங்குகதிர் வெள்ளி தென் புலம் படரினும்,
அம் தண் காவிரி வந்து கவர்பு ஊட்ட,
தோடு கொள் வேலின் தோற்றம் போல,
ஆடு கண் கரும்பின் வெண் பூ நுடங்கும்
நாடு எனப்படுவது நினதே அத்தை; ஆங்க
நாடு கெழு செல்வத்துப் பீடு கெழு வேந்தே!
நினவ கூறுவல்; எனவ கேண்மதி!
அறம் புரிந்தன்ன செங்கோல் நாட்டத்து
முறை வேண்டு பொழுதில் பதன் எளியோர் ஈண்டு
உறை வேண்டு பொழுதில் பெயல் பெற்றோரே;
ஞாயிறு சுமந்த கோடு திரள் கொண்மூ
மாக விசும்பின் நடுவு நின்றாங்கு,
கண் பொர விளங்கு நின் விண் பொரு வியன்குடை
வெயில் மறைக் கொண்டன்றோ? அன்றே; வருந்திய
குடி மறைப்பதுவே; கூர்வேல் வளவ!
வெளிற்றுப் பனந் துணியின் வீற்றுவீற்றுக் கிடப்ப,
களிற்றுக் கணம் பொருத கண் அகன் பறந்தலை,
வருபடை தாங்கி, பெயர் புறத்து ஆர்த்து,
பொருபடை தரூஉம் கொற்றமும் உழுபடை
ஊன்று சால் மருங்கின் ஈன்றதன் பயனே;
மாரி பொய்ப்பினும், வாரி குன்றினும்,
இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும்,
காவலர்ப் பழிக்கும், இக் கண் அகல் ஞாலம்;
அது நற்கு அறிந்தனைஆயின், நீயும்
நொதுமலாளர் பொதுமொழி கொள்ளாது,
பகடு புறந்தருநர் பாரம் ஓம்பி,
குடி புறந்தருகுவை ஆயின், நின்
அடி புறந்தருகுவர், அடங்காதோரே.
----------------
உலகம் வாழ்கிறது எதனால் என்று தெரிந்துகொள்வோம்.
தனக்கென முயலாமல்
பிறருக்கு உதவுதற்காக முயலும்
மிகப்பெருந் தாளாண்மை உடையவர்
உலகில் வாழ்வதால்தான்.
அவர்கள்
இந்திர உலகத்து அமிழ்தமே கிடைத்தாலும்
‘ஆ ஆ இனிது’ என்று எண்ணி,
தான்மட்டும் உண்ணமாட்டார்கள்.
உலகில் எது நடந்தாலும்
வெறுத்துச் சினம் கொள்ளமாட்டார்கள்.
பிறர் அஞ்சி ஒதுங்கும் நற்பணிகளைச் செய்யும்போது தயங்கமாட்டார்கள்.
புகழ் வரும் என்றால்
அதனைப் பெறத்
தன் உயிரையும் கொடுப்பர்.
பழி வரும் என்றால்
உலகையே சேர்த்துக் கொடுத்தாலும்
வாங்கிக்கொள்ள மாட்டார்கள்.
அயராமல் உழைத்துக்கொண்டே இருப்பர்.
இத்தகையர் வாழ்வதால்தான் உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது.
உண்டால் அம்ம, இவ் உலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவதுஆயினும், 'இனிது' எனத்
தமியர் உண்டலும் இலரே; முனிவு இலர்;
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சி,
புகழ் எனின், உயிரும் கொடுக்குவர், பழி எனின், 5
உலகுடன் பெறினும், கொள்ளலர்; அயர்விலர்;
அன்ன மாட்சி அனையர் ஆகி,
தமக்கு என முயலா நோன் தாள்,
பிறர்க்கு என முயலுநர் உண்மையானே.
--------------
“மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே”
“Those who give food to all who live in this vast world are, in truth, those who give life itself.”
இந்த உலகில் வாழும் அனைவருக்கும்
உணவு அளிப்பவர்கள், உயிர் அளிப்பவர்களே.
------
புறநானூறு
நீரின்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!
உண்டி முதற்றே உணவின் பிண்டம்;
உணவெனப் படுவது நிலத்தொடு நீரே;
நீரும் நிலமும் புணரியோர், ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசினோரே!
விளக்கம்
நீர் இன்றி அமையாத உடல் உணவால் அமைவது; உணவையே முதன்மையாகவும் உடையது. எனவே உணவு தந்தவர் உயிரைத் தந்தவர் ஆவர். உணவு எனப்படுவது நிலத்துடன் நீரும் ஆகும். நிலத்தையும் நீரையும் ஒன்று சேர்த்தவர் இவ்வுலகில் உடலையும் உயிரையும் ஒன்று சேர்த்தவர்.
வித்திவான் நோக்கும் புன்புலம் கண்ணகன்
வைப்பிற்று ஆயினும், நண்ணி ஆளும்
இறைவன் தாட்கு உதவாதே! அதனால்
அடுபோர்ச் செழிய! இகழாது வல்லே ;
நிலன் நெளிமருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோர் அம்ம! இவன் தட்டோரே!
தள்ளாதோர் இவன் தள்ளாதோரே!
விளக்கம்
நெல் முதலிய தானியங்களை விதைத்து மழையைப் பார்த்திருக்கும் பரந்த நிலமாயினும் அதனைச் சார்ந்து ஆளும் அரசனின் முயற்சிக்குச் சிறிதும் உதவாது. அதனால், நான் கூறிய மொழிகளை இகழாது விரைவாக கடைப்பிடிப்பாயாக.
நிலம் குழிந்த இடங்கள்தோறும் நீர்நிலையைப் பெருகச் செய்தல் வேண்டும். அவ்வாறு நிலத்துடன் நீரைக் கூட்டியோர் மூவகை இன்பத்தையும் நிலைத்த புகழையும் பெறுவர். இதைச் செய்யாதவர் புகழ் பெறாது வீணே மடிவர்.
-------
குளம்தொட்டுக் கோடு பதித்து வழிசீத்து
உளம்தொட்டு உழுவயல் ஆக்கி - வளம்தொட்டுப்
பாகுபடும் கிணற்றோடு என்று இவ்வைம் பாற்படுத்தான்
ஏகும் சொர்க்கத்து இனிது
- சிறுபஞ்சமூலம்
விளக்கம்
மக்கள் நலனுக்காக,
இவ்வாறு ஐந்து வகையான நீர்ப்பாசனப் பணிகளைச் செய்பவன், இறந்தபின் சொர்க்கத்தை அடைந்து இன்பம் பெறுவான் என்று பாடல் கூறுகிறது.
------