Published on 14 Jun 2026
விண்ணினை இடறும் மோலி; விசும்பினை நிறைக்கும் மேனி;
கண்ணெனும் அவை இரண்டும் கடல்களின் பெரிய ஆகும்;
எண்ணினும் பெரியன் ஆன இலங்கையர் வேந்தன் பின்னோன்,
மண்ணினை அளந்து நின்ற மால் என வளர்ந்து நின்றான்
எண்ணும் எண்ணத்தில் அடங்காத வலிமையும் வர ஆற்றலும் பெற்ற பெரியவன் ஆன இலங்கையர்க்கு அரசனான இராவணனது பின் பிறந்தவனான கும்பகருணன், விண்ணை முட்டும் சிரமும் (தலையும்), ஆகாயத்தை மறைக்கும் மேனியுடனும் கடலை விடப் பெரியவை என்று சொல்லும் படியான கண்கள் இரண்டு உடனும் தோன்றினான்.
அத்தோற்றம் மாபலியிடம் மூவடி மண் கேட்ட குறளனாக வந்த திருமால் வளர்ந்து நின்றது போல் இருந்தது!
------
சூலம் ஏகம் திருத்திய தோளினான்;
சூல மேகம் எனப் பொலி தோற்றத்தான்;
காலன்மேல் நிமிர் மத்தன்;
ககும்பகருணன் தோற்றம்ழல் பொரு காலன்;
ஒப்பற்ற சூலப்படையைத் தீட்டி வைத்துள்ள தோளை உடையவன். கருக்கொண்ட கருமேகம் போல் விளங்குகின்ற தோற்றம் உள்ளவன். எமன் மேல் போருக்குச் செல்லும் அளவு உடல் கொழுப்புடையவன். வீரக் கழல் அணிந்த கால்களை உடையவன்.
------
‘வென்று இவண் வருவென் என்று உரைக்கிலேன்; விதி
நின்றது; பிடர் பிடித்து உந்த நின்றது;
தலைவனே! “இங்கு வெற்றி பெற்று மீண்டும் வருவேன் என்று சொல்ல இயலாமல் உள்ளேன். வெல்லுதற்கரிதாய் நிற்கும் விதி கழுத்தின் புறத்தைப் பிடித்துத் தள்ளும்படி நிற்கிறது. அதனால் யான் போரில் இறந்து விடுவேன்.
------
‘என்னை வென்றுளர் எனில், இலங்கை காவல!
உன்னை வென்று உயருதல் உண்மை; ஆதலால்,
பின்னை நின்று எண்ணுதல் பிழை;
இலங்கைக்குக் காவலனே! அப்பகைவர்களாகிய இருவர் என்னை வென்றார்களானால், உன்னையும் வென்று மேம்படுதல் திண்ணம். அதனால் மேலும் அவர்களை வெல்ல வேறு உபாயங்களை எண்ணுதல் தவறான செயல்.
----
‘தோளொடு தோள் செலத் தொடர்ந்து நோக்குறின்,
நாள் பல கழியுமால்; நடுவண் நின்றது ஓர்
தாளுடை மலைகொலாம்; சமரம் வேட்டது ஓர்
ஆள் என உணர்கிலேன்; ஆர்கொலாம் இவன்?
“இவனுடைய ஒரு தோளோடு மற்றொரு தோள் வரை முழுவதும் தொடர்ச்சியாக பார்க்க முயலின் பலநாள் கழிந்துவிடும். உலகுக்கு நடுவில் உள்ள ஒப்பற்ற மேருமலை கால் முளைத்து இவ்வாறு வந்ததோ? இவனைப் போரை விரும்பி வந்த ஒரு வீரன் என்று நினைக்க முடியவில்லை. இவன் யாரோ?”
------
கார் இயல் காலன் அன்ன கழல் கும்பகருணன் என்னும்
கூரிய சூலத்தான்’
கருமை நிறம் பொருந்திய இயமனை ஒத்த வீரக்கழல் அணிந்த கும்பகருணன் என்னும் பெயர் கொண்டவன். கூர்மையான சூலத்தைக் கையில் கொண்டவன்.
-----
“தருமம் அன்று இதுதான்; இதால் வரும், நமக்கு உயிர் மாய்வு” எனா
-----
முந்தி வந்து இறைஞ்சினானை, முகந்து உயிர் மூழ்கப் புல்லி,
‘உய்ந்தனை, ஒருவன் போனாய்’ என மனம் உவக்கின்றேன் தன்
சிந்தனை முழுதும் சிந்த, தெளிவு இலார் போல மீள வந்தது என், தனியே?’ என்றான்,
மழையின் நீர் வழங்கு கண்ணான்
மழை போல கண்ணீர் சொரியும் கண்களை உடைய கும்பகருணன் தன் முன்னே வந்து வணங்கியவனாகிய வீடணனை, உச்சி மோந்து ஈருடலும் ஓருயிரும் ஆகுமாறு இறுகத் தழுவி, “நீ ஒருவனாவது விலகிச் சென்று உய்ந்து விட்டாய் என்று எண்ணி மனம்
பெருங்களிப்புக் கொள்ளுகிற என்னுடைய மன எண்ணம் முழுவதும் சிதறிக் கெடுமாறு, அறம் இது மறம் இது என மனத் தெளிவில்லாதவர் போல மீண்டும் தனியாக வந்தது என்ன காரணம் கருதியோ?” என வினவினான்.
------
‘ஐய! நீ அயோத்தி வேந்தற்கு அடைக்கலம் ஆகி, ஆங்கே
உய்கிலை என்னின், மற்று இல் அரக்கராய் உள்ளோர் எல்லாம்
எய் கணை மாரியாலே இறந்து, பாழ் முழுதும் பட்டால்,
கையினால் எள் நீர் நல்கி, கடன் கழிப்பாரைக் காட்டாய்.
ஐயனே! அயோத்திக்கு வேந்தன் ஆகிய இராமனுக்கு அடைக்கலப் பொருள் ஆகி, நீ அங்கு உயிர் உய்ந்து வாழாய் ஆயின் இந்த அரக்கர்கள் நாங்கள் எல்லாம் இராமன் எய்யும் அம்பு மழையால் முற்றிலும் இறந்து பாழாகிப் போனால் கையில் எள்ளோடு கூறிய நீரை இறந்தவர் பொருட்டுக் கொடுத்து நீர்க் கடன் நிறைவேற்றுவர் யார் உளர் எனக் காட்டாய்.
------
‘நீர்க் கோல வாழ்வை நச்சி, நெடிது நாள் வளர்த்துப் பின்னைப்
போர்க் கோலம் செய்து விட்டாற்கு உயிர் கொடாது, அங்குப் போகேன்;
-----
‘கருத்து இலா இறைவன் தீமை கருதினால், அதனைக் காத்துத்
திருத்தலாம் ஆகின் அன்றோ திருத்தலாம்?
தீராது ஆயின், பொருத்து உறு பொருள் உண்டாமோ?
பொரு தொழிற்கு உரியர் ஆகி, ஒருத்தரின் முன்னம் சாதல்,
உண்டவர்க்கு உரியது அம்மா
மந்திரம் கேட்கும் சூழ்தல் இல்லாத தலைவன், தீத்தொழில் செய்ய எண்ணினால், அவன் அவ்வாறு செய்யாமல் தடுத்து திருத்துதல் கூடுமாயின் அன்றோ திருத்தலாம். அவ்வாறு திருத்த முடியாது போனால், அவனுக்கு எதிராக சென்று அடையத் தக்க பெரும் பொருள் உண்டோ? ஒருவனுடைய உணவை உண்டு வளர்ந்தவர் செய்ய உரிய செயல் அவனுக்காகப் போர் செய்யும் தொழிலுக்கு உரிமையுடையவர் ஆகி, ஒப்பற்ற தலைவனுக்கு முன்னர்ச் சாதலே ஆகும்.
-----
‘செம்பு இட்டுச் செய்த இஞ்சித் திரு நகர்ச் செல்வம் தேறி,
வம்பு இட்ட தெரியல் எம்முன் உயிர் கொண்ட பகையை வாழ்த்தி,
அம்பு இட்டுத் துன்னம் கொண்ட புண்ணுடை நெஞ்சோடு, ஐய!
கும்பிட்டு வாழ்கிலேன்
கூற்றுவனையும் வெற்றி கொண்டவனாகிய நான், செம்பை உருக்கி வலிமையும் அழகும் படச் செய்த மதிலால் சூழப்பட்ட அழகிய இலங்கை நகரின் அரசுச் செல்வத்தை நிலையானது என்று கருதி, மணம் பொருந்திய மலர் மாலையணிந்த என் அண்ணனுடைய உயிரைக் கொண்ட பகைவனாகிய இராமனை வாழ்த்திக் கொண்டு அம்பு பட்டுத்துளைபட்ட புண்பட்ட நெஞ்சத்துடன் கும்பிட்டு வாழ மாட்டேன்.
------
எறிகுவென் இதனை நின்மேல்; இமைப்புறும் அளவில் ஆற்றல்
மறிகுவது அன்றி, வல்லை மாற்றினை என்னின், வன்மை
அறிகுவர் எவரும்; பின்னை யான் உன்னோடு அமரும் செய்யேன்;
பிறிகுவென்; உலகில், வல்லோய்! பெரும் புகழ் பெறுதி’ என்றான்
அனுமன் கும்பகர்ணனிடம் :
“மிகு வலியுடைய கும்பகருணனே! இம்மலையை உன்மேல் எறியப் போகிறேன். இதனால் இமைப்பொழுதில் உன் வலிமை மாய்ந்து போவது அல்லாமல், விரைவாக இதனைத் தள்ளி மாற்றி விட்டாய் என்றால் உன் வல்லமையை எல்லோரும் அறிவர். பிறகு நான் உன்னோடு போர் செய்யாமல் அப்பால் சென்று விடுவேன், நீ உலகத்தில் பெரும் புகழ் பெறுவாய்!” என்றான்.
------
இளக்கம் ஒன்று இன்றி நின்ற இயற்கை பார்த்து, ‘இவனது ஆற்றல்
அளக்குறற்பாலும் ஆகா; குலவரை அமரின் ஆற்றா;
துளக்குறும் நிலையன் அல்லன்; சுந்தரத் தோளன் வாளி
பிளக்குமேல், பிளக்கும்’ என்னா, மாருதி பெயர்ந்து போனான்
வலிய மலை தாக்கியும் தளர்ச்சி எதுவும் இல்லாமல் கும்பகருணன் நின்ற தன்மையைப் பார்த்து, இவனுடைய வலிமை எவ்வளவு என்று அளவிட்டுச் சொல்லக் கூடியதல்ல. கூட்டமாக உள்ள மலைகளும் போரில் இவன் வலிமைக்கு தாங்க மாட்டா. எவராலும் தளர்ச்சி அடையச் செய்யும் தன்மை உடையவன் அல்லன். அழகிய தோள்களை உடைய இராமபிரானின் அம்பு பிளக்கக் கூடுமானால் கூடும். என்று கூறி, அனுமன் அப்பால் போயினன்
-----
ஏற்று ஒரு கையினால், ‘இதுகொல், நீ அடா!
ஆற்றிய குன்றம்?’ என்று, அளவு இல் ஆற்றலான்,
நீற்று இயல் நுணுகுறப் பிசைந்து, ‘நீங்கு’ எனா,
தூற்றினன்; இமையவர் துணுக்கம் எய்தினார்.
அளவற்ற வலிமை உடைய கும்பகருணன், சுக்கிரீவன் வீசிய அந்தப் பெரிய மலையினை ஒரு கையால் ஏற்று, அடா நீ வலிமை கொண்டு வீசிய மலை இதுதானா? என்று சொல்லி, நீற்றின் (விபூதி போல) தன்மையதாய் ஆகுமாறு பொடியாகப் பிசைந்து போ!, என்று சொல்லித் தூற்றி விட்டான். அப்பேராற்றலைக் கண்ட தேவர்கள் அச்சம் கொண்டனர்.
------
‘உம்பியை முனிந்திலேன், அவனுக்கு ஊர்தியாம்
தும்பியை முனிந்திலேன், தொடர்ந்த வாலிதன்
தம்பியை முனிந்திலேன், சமரம் தன்னில் யான்
அம்பு இயல் சிலையினாய்!-புகழ் அன்று ஆதலால்.
கும்பகர்ணன் இராமனிடம்
“அம்பு தொடுக்கப் பட்ட வில்லினை உடையவனே! நான் போரில் உன் தம்பியைச் சினந்தேன் இல்லை. அவனுக்கு ஊர்தியாக அமைந்த யானை போன்றவனான அனுமனைச் சினந்தேனில்லை. என்னைத் தொடர்ந்து வந்த வாலியின் தம்பியாகிய சுக்கிரீவனைச் சினந்தேனில்லை. எனக்குச் சமம் ஆனவர்கள் அல்லாத அவர்களை வெல்வது எனக்குப் புகழ் தருவதன்று என்பதால்”
No tags available