Importance of Education

Published on 13 Apr 2026


முதலில் கல்வி என்பதன் அர்த்தம் என்ன ?

எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு.

கேட்பவருக்குப் புரியும்படி எளிமையாகத் தான் விளக்கிச் சொல்லியும், பிறரின் பேச்சுக்களில் உள்ள நுண்மையான பொருளைக் காண்பதும், அறிவு ஆகும்

------------

கல்விக்கு எல்லை இல்லை. மனிதன் பிறந்தது முதல் இறுதிவரை கற்றுக்கொண்டே இருக்கிறான். கல்வி மனிதனை உயர்த்துகிறது. கல்வியும் செல்வமாக கருதத் தக்கது. அது பிறருக்கு தந்தாலும் குறையாமல் வளரும். கல்வியை பிறரால் கைப்பற்றவோ அழிக்கவோ முடியாது. அழியாச் செல்வமாகிய கல்வியைக் கற்றவன் எங்கும் எப்போதும் சிறப்பு பெறுவான். எனவே, நாமும் கற்போம்; தமிழை வளர்ப்போம்; தமிழ் இனத்தை காப்போம்.

------------

மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் 
மன்னனின் கற்றோன் சிறப்புடையன் - மன்னற்குத் 
தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச் 
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

- ஔவையார் 

-------------

திருக்குறள்

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்.

செல்வர்களின் முன்னே உதவி கேட்கும் எளியவர் பணிவோடு நிற்பது போல, ஆசிரியரிடம் பணிந்து நின்று கற்றவரே சிறந்தவர்; கல்லாதவரோ கடையர்!

------------

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண். 

இறுதிக்காலம் வரையும் காப்பாற்றும் கருவி அறிவு ஆகும்; பகைவருக்கும் உட்புகுந்து அழிக்க இயலாத கோட்டையும் அந்த அறிவு ஆகும்.

கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார்.

‘கற்றவர்களுள் கற்றவர்’ என்று புகழப்படுகின்றவர்கள், கற்றவர் அவையின் முன், தாம் கற்றதை அவர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு எடுத்துச் சொல்லக் கூடியவர்களே ஆவர்  

வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு.

அஞ்சாமை இல்லாதவர்க்கு அவர் ஏந்தியுள்ள வாளினால் என்ன பயன்? நுட்பமான அறிவையுடையவர் அவையிலே பேச அஞ்சுபவர்க்கு நூலறிவாலும் பயன் இல்லை.

பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சு மவன்கற்ற நூல்.

பகைவர் நடுவே புகுந்த, பேடியின் கையிலேயுள்ள கூர்மையான வாள் பயன்படாததைப் போல, அவையில் பேசுவதற்கு அஞ்சுகிறவன் நூலறிவும் பயன்படாது.

கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்
நல்லா ரவையஞ்சு வார்.

தாம் பல நூல்களைக் கற்று அறிந்திருந்தாலும், நல்லறிவு உடையவர் அவையிலே பேசுவதற்கு அஞ்சுகிறவர்கள் கல்லாதவரினும் கடைப்பட்டவர்கள் ஆவர்.

------------

உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று.

சொல்லின் பயனை உணர்கின்றவர்களின் முன்பாக ஒன்றைச் சொல்லுதல், நல்ல பயிர் வளருகின்ற பாத்தியினுள்ளே, நீர் சொரிந்தாற் போலப் பெரும்பயன் தருவதாகும். ஆசிரியர் நன்மை தரும் வார்த்தைகளையே மாணவர்களிடம் கூறவேண்டும்.

--------------

"அணை உடைஞ்சு போன வெள்ளம் அழுதாலும் வராது", அதுபோல படிக்கும் காலத்தை வீணடித்தால், காலம் திரும்ப வராது குழந்தைகளே 

---------------

உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின். 

தான் அடையக் கருதியதை இடைவிடாமல் மறதியின்றி நினைக்கக் கூடுமானால், ஒருவன், தான் நினைத்ததை அடைதல் என்பது எளிதாயிருக்கும்

---------

  • கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு
  • கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி
  • கல்வி கரையில கற்பவர் நாள்சில
  • கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு
  • கல்வியழகே அழகு

---------

  • கற்ற கல்வியும் பெற்ற செல்வமும் கடைசி மூச்சுவரை பிறருக்குக் கொடுக்கத்தான்.
  • கல்வி ஓர் அணிகலன். அணிந்தால் அழகு தரும், அணிவித்தால் சிறப்பினைத் தரும்.
  • எடுத்தால் குறைவது செல்வம், கொடுத்தால் வளர்வது கல்வி.

---------

வாழ்க்கையில் அடிப்படைத் தேவைக ளுக்கு அடுத்த இடம் புத்தக சாலைக்குத் தரப்படவேண்டும்! - அறிஞர் அண்ணா

உலகில் சாகாவரம் பெற்ற பொருள்கள் புத்தகங்களே! - கதே

-------

அறிவுடையார் தாமே உணர்வர்

பூவாது காய்க்கும் மரம் உள; நன்று அறிவார்,
மூவாது மூத்தவர், நூல் வல்லார்; தாவா,
விதையாமை நாறுவ வித்துஉள; மேதைக்கு
உரையாமை செல்லும் உணர்வு.

                                                                ---சிறுபஞ்சமூலம் (காரியாசான்)

பூக்காமலே சில மரங்கள் காய்ப்பதுண்டு. இதைப் போலவே நன்மை , தீமைகளை நன்குணர்ந்தவர் , வயதில் இளையவராக இருந்தாலும், அவர் மூத்தவரோடு வைத்து எண்ணத் தக்கவரே ஆவார். பாத்தி அமைத்து விதை விதைக்காமலே, தானே முளைத்து வளரும் விதைகளும் உள்ளன . அ தைப் போலவே மேதையரும் பிறர் உணர்த்தாமல் எதையும் தாமே உணர்ந்துகொள்வர்.

தமிழில் சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து நீதிநூல்கள் தோன்றின. அவை பதினெண் கீழ்க்கணக்கு எனத் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று சிறுபஞ்சமூலம். ஐந்து சிறிய வேர்கள் என்பது இதன் பொருள். அவை கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகியன. இவ்வேர்களால் ஆன மருந்து உடலின் நோயைப் போக்குகின்றது. அதுபோலச் சிறுபஞ்சமூலப் பாடல்களில் உள்ள ஐந்தைந்து கருத்துகள் மக்களின் அறியாமையைப் போக்கி நல்வழிப்படுத்துவனவாய் அமைந்துள்ளன. இப்பாடல்கள் நன்மை தருவன, தீமை தருவன, நகைப்புக்கு உரியன என்னும் வகையில் வாழ்வியல் உண்மைகளை எடுத்துக்காட்டுகின்றன.

--------

ஆக்குவது ஏதெனில் அறத்தை ஆக்குக
போக்குவது ஏதெனில் வெகுளி போக்குக
நோக்குவது ஏதெனில் ஞானம் நோக்குக
காக்குவது ஏதெனில் விரதம் காக்கவே.

--யசோதர காவியம்

விளக்கம் 
நாம் ஒரு செயலைச் செய்வதென்றால் அச்செயல் பயன்தரத்தக்க நற்செயலாக இருத்தல் வேண்டும் ; நம்மிடம் உள்ள தீய பண்புகளை நீக்கிட வேண்டுமாயின் முதலில் சினத்தை நீக்கவேண்டும்; ஆராய வேண்டுமானால் மெய்யறிவு நூல்களை ஆராய வேண்டும்; இடைவிடாது போற்றிக் காக்க வேண்டுமானால் தாம் கொண்ட நன்னெறியினைக் காக்க வேண்டும்.

🏷️ Tags:
Education

📰 Related Articles