Published on 29 Apr 2026
--------
புதிய செய்திகளைக் கற்பது மட்டும் கல்வியன்று. மனிதனின் உள்ளத்தில் புதைந்துகிடக்கும் நற்பண்புகளை வெளிக்கொண்டு வருவதும் அவனது வாழ்வில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்துவதும் கல்வியின் நோக்கங்களாகும்.
--------
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
கற்பதற்குத் தகுதியான நூல்களைப் பழுதில்லாமல் கற்க வேண்டும்; கற்றதன் பின்னர் கற்ற அக்கல்வியின் தகுதிக்குத் தகுந்தபடி நடக்கவும் வேண்டும்
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.
‘கண்’ உடையவர் என்று உயர்வாகக் கூறப்படுவோர் கற்றவரே ஆவர்; கல்லாதவர்கள் தம் முகத்தில் இரண்டு புண் உடையவர்கள் ஆவர்
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.
எல்லாரும் மகிழும் வகையிலே கூடியிருந்து, ‘இனி என்று மீளக் கூடுவோம்’ என்று எண்ணும்படியாகப் பிரிதல் கல்வியறிவினரது செயல் ஆகும்
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்.
செல்வர்களின் முன்னே உதவி கேட்கும் எளியவர் பணிவோடு நிற்பது போல, ஆசிரியரிடம் பணிந்து நின்று கற்றவரே சிறந்தவர்; கல்லாதவரோ கடையர்!
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.
மணலிலே தோண்டும் கிணற்றில், தோண்டிய அளவுக்கே நீர் ஊறும்; மாந்தருக்கும் அவரவர் முயன்று கற்றதன் அளவுக்கே அறிவும் ஊறிச் சுரக்கும்
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.
கற்றவனுக்கு எந்த நாடும் நாடாகும்; எந்த ஊரும் ஊராகும்; இதுவே உண்மையாக இருந்தும் ஒருவன் சாகும் வரைக்கும் கல்லாமலிருப்பது எதனால்?
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.
ஒரு பிறவியிலே தான் கற்ற கல்வியானது, ஒருவனுக்குத் தொடர்ந்து வரும் ஏழு பிறப்புக்களிலும் அவனைப் பாதுகாக்கும் சிறப்புடையது ஆகும்
தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.
தாம் இன்பம் அடைவதாகிய கல்வியினாலே உலகத்தாரும் இன்பம் அடைவதைக் கண்டு, கற்றறிந்தவர், மேன்மேலும் தாம் கற்பதையே விரும்புவார்கள்
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.
‘அழிவில்லாத சிறந்த செல்வம்’ என்பது கல்விச் செல்வமே; மற்றைய பொன் பொருள் மண் என்னும் செல்வங்கள் ஒருவனுக்குச் சிறந்த செல்வம் ஆகா
------
தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.
தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்.
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.
தம்மைக் காட்டினும், தம் மக்கள் அறிவுடையவராக விளக்கம் பெறுதல், பெற்றோருக்கு மட்டுமல்லாமல், பெரிய உலகிலுள்ள உயிர்களுக்கெல்லாம் இனிமையானது ஆகும்
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்
மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.
-------
நீதிநெறி விளக்கம்
அவையஞ்சி மெய்விதிர்ப்பார் கல்வியும் கல்லார்
அவையஞ்சா ஆகுலச் சொல்லும் - நவையஞ்சி
ஈத்துணாச் செல்வமும் நல்கூர்ந்தார் இன்னலமும்
பூத்தலின் பூவாமை நன்று
- குமரகுருபரர்
----------
கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால்
மற்றோர் அணிகலம் வேண்டாவாம் - முற்ற
முழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா யாரே`
அழகுக்கு அழகு செய்வார்.
- குமரகுருபரர்
விளக்கம்
ஒளிரும் மணிகளால் செய்யப்பட்ட அணிகலனுக்கு மேலும் அழகூட்ட வேறு அணிகலன்கள் தேவையில்லை. அதுபோலக் கல்வி கற்றவர்க்கு அவர் கற்ற கல்வியே அழகு தரும். ஆகையால் அழகு சேர்க்கும் பிற அணிகலன்கள் அவருக்குத் தேவையில்லை.
--------
நாலடியார்
கல்வி கரையில; கற்பவர் நாள்சில;
மெல்ல நினைக்கின் பிணிபல;-தெள்ளிதின்
ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து.
விளக்கம்
"கல்விக்கு கரை இல்லை. நம் வாழ்நாளோ மிகவும் சொற்பமானது. அதிலும் பல நாட்கள் நோயில் போய் விடுகிறது. எனவே, ஆராய்ந்து, தெளிந்து சிறந்தவனவற்றையே படிக்க வேண்டும். எப்படி என்றால், நீரும் பாலும் கலந்து இருந்தாலும், நீரை விடுத்து பாலை மட்டும் உண்ணும் அன்னம் போல."
--------
இந்நாளில் ஏட்டுக்கல்வியே கல்வி என்னும் ஒரு கொள்கை எங்கும் நிலவி வருகிறது. ஏட்டுக்கல்வி மட்டும் கல்வி ஆகாது. இந்நாளில் கல்வியென்பது பொருளற்றுக் கிடக்கிறது. குறிப்பிட்ட பாடங்களை நெட்டுருச் செய்து, தேர்வில் தேறிப் பட்டம் பெற்று, ஒரு தொழிலில் நுழைவதற்குக் கல்வி ஒரு கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது. நாளடைவில் அக்கல்விக்கும் வாழ்விற்கும் தொடர்பில்லாமல் போகிறது. இது கல்வியாகுமா?
ஏட்டுக் கல்வி மட்டுமன்றித் தொழிற்கல்வி முதலியனவும் கல்வியின் பாற்பட்டனவே. கல்வித்துறைகள் பல திறத்தன. அவற்றுள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவர் இயல்புக்குப் பொருந்தியதாகத் தோன்றும். அப்பொருந்திய ஒன்றில் சிறப்பு அறிவு பெறவும் பிறவற்றில் பொது அறிவு பெறவும் அவரவர் முயல்வது ஒழுங்காகும். தொழில் நோக்குடன் கல்வி பயிலுதல் வேண்டா என்றும் அறிவு விளக்கத் தின் பொருட்டுக் கல்வி பயிலுதல் வேண்டும் என்றும் இயற்கை அன்னை எச்சரிக்கை செய்தவண்ணமிருக்கிறாள்.
அறிவு விளக்கத்துக்கெனக் கல்வி பயின்று, அவ்வறிவை நாட்டுத் தொழில்துறைகளைப் புதியமுறைகளில் வளர்க்கப் பயன்படுத்துவாராக.
நாம் தமிழ் மக்கள் ; நாம் நமது தாய்மொழி வாயிலாகக் கல்வி பெறலே சிறப்பு. அதுவே இயற்கை முறை. போதிய ஓய்வும் நேரமும் வாய்ப்பும் இருப்பின் வேறு பல மொழிகளையும் பயிலலாம். ஆனால் முதல் முதல் தாய்மொழி வாயிலாகவே கல்வி பயிலுதல் வேண்டும். தாய்நாடு என்னும் பெயர் தாய்மொழியைக் கொண்டே பிறப்பது.
தமிழிலேயே கல்வி போதிக்கத் தமிழில் போதிய கலைகளில்லையே; சிறப்பான அறிவியல் கலைகளில்லையே என்று சிலர் கூக்குரலிடுகிறார். அவரவர் தாம் கண்ட புதுமைகளை முதல் முதல் தம் தாய்மொழியில் வரைந்துவிடுகிறார். அவை பின்னே பல மொழிகளில் பெயர்த்து எழுதப்படுகின்றன. அம்மொழிபெயர்ப்பு முறையைத் தமிழர் கொண்டு ஏன் தாய்மொழியை வளர்த்தல் கூடாது? குறியீடுகளுக்குப் பல மொழிகளினின்றும் கடன் வாங்குவது தமிழுக்கு இழுக்காகாது . கலப்பில் வளர்ச்சியுண்டென்பது இயற்கை நுட்பம். தமிழை வளர்க்கும் முறையிலும் அளவிலும் கலப்பைக் கொள்வது சிறப்பு.
இலக்கியங்கள் பலப்பல இருக்கின்றன. இயற்கை ஓவியம் பத்துப்பாட்டு, இயற்கை இன்பக்கலம் கலித்தொகை, இயற்கை வாழ்வில்லம் திருக்குறள், இயற்கை இன்பவாழ்வு நிலையங்கள் சிலப்பதிகாரமும் மணிமேகலையும், இயற்கைத் தவம் சிந்தாமணி, இயற்கைப் பரிணாமம் கம்பராமாயணம், இயற்கை அன்பு பெரியபுராணம், இயற்கை இறையுறையுள் தேவார திருவாசக திருவாய் மொழிகள். இத்தமிழ்க் கருவூலங்களை உன்ன உன்ன உள்ளத்தெழும் இன்ப அன்பைச் சொல்லால் சொல்ல இயலாது. இளைஞர்களே! தமிழ் இளைஞர்களே! பெறற்கரிய இன்ப நாட்டில் பிறக்கும் பேறு பெற்றிருக்கிறீர்கள்! தமிழ் இன்பத்திலுஞ் சிறந்த இன்பம் இவ்வுலகிலுண்டோ? தமிழ்க் காவியங்களைப் படியுங்கள். இன்பம் நுகருங்கள்.