Published on 29 Apr 2026
தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது.
முற்றுகை செய்வதற்கு ஏற்ற இடத்தைக் கண்டபின் அல்லாமல் எச் செயலையும் தொடங்கக்கூடாது, பகைவரை இகழவும் கூடாது.
எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்.
தகுதியான இடத்தை ஆராய்ந்து பற்றிக் கொண்டவர்கள், போரையும் நெருங்கிச் செய்தாரானால், அவரை வெல்ல எண்ணியவர், தம் எண்ணம் இழப்பார்கள்
கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து.
நிலத்திலே ஓடுவதற்குரிய வலிய சக்கரங்களைக் கொண்ட தேர்கள் கடலில் ஓடா; கடலில் ஓடும் கப்பல்களும் நிலத்தில் ஓடமாட்டா
அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின்
செய்ய வேண்டியவைகளை எல்லாம் நன்றாக ஆராய்ந்து தகுதியான இடத்திலும் செய்வாரானால், அவருக்கு மனவுறுதியைத் தவிரத் துணை எதுவும் வேண்டாம்
சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்
சிறு படையினை உடையவனும், தன் வலிமையைச் செலுத்தக்கூடிய இடத்தில் சேர்ந்திருந்தால், பெரும்படை உடையவனும் தன் முயற்சியில் தோல்வி காண்பான்
காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு.
போர்க்களத்தில் வேலேந்திய வீரரையும் கோத்து எடுத்த கொம்புடைய அஞ்சாத களிற்றையும், அதன் கால் ஆழ்கின்ற சேற்று நிலத்தில், சிறுநரிகள் கொன்றுவிடும்