Conversing with the Heart / Nenchathodu Kilathal

Published on 14 Jun 2026


நெஞ்சோடு கிளத்தல்

நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கும் மருந்து

நெஞ்சமே! இந்தத் துன்பம் தரும் நோயினைத் தீர்க்கும் மருந்து ஏதாயினும் ஒன்றை நினைத்துப் பார்த்து, எனக்கு நீயாயினும் சொல்ல மாட்டாயோ? 

காதல் அவரிலர் ஆகநீ நோவது
பேதைமை வாழியென் நெஞ்சு. 

நெஞ்சமே! அவர்தாம் நம்மிடம் காதல் இல்லாதவராக இருக்கவும், நீ மட்டும் அவரையே எப்போதும் நினைந்து நினைந்து வருந்துவது பேதைமை ஆகும்

கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்க்காணல் உற்று. 

நெஞ்சமே! நீ அவரிடம் போகும் போது, இக்கண்களையும் அழைத்துப் போவாயாக! அவரைக் காண வேண்டும் என்று இவை என்னைப் பிடுங்கித் தின்கின்றன

செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர். 

நெஞ்சமே! நாம் விரும்பி நாடினாலும், நம்மை நாடாத அவர், நம்மை வெறுத்து விட்டார் என்று நினைத்து, அவரைக் கைவிட நம்மால் முடியுமோ? 

காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேன்இவ் விரண்டு.

நல்ல நெஞ்சமே! ஒன்று காமத்தை விட்டுவிடு; அல்லது நாணத்தை விட்டுவிடு; இந்த இரண்டையும் சேர்த்துப் பொறுத்துக் கொண்டிருக்க என்னால் முடியாது

பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு.

என் நெஞ்சமே! நம் துன்பத்தை நினைந்து இரங்கி வந்து அவர் அன்பு செய்யவில்லை என்று ஏங்கிப் பிரிந்த காதலரின் பின்னாகச் செல்கின்றாயே, நீ பேதைமை உடையை!

🏷️ Tags:
KaamathupaalKarpiyal

📰 Related Articles