Published on 13 Apr 2026
வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு. அரசன் குடிகளிடம் முறை கடந்து பொருளைக் கேட்பது, கையிலே வேலோடு நிற்கும் கள்வன், ‘எல்லாவற்றையும் தந்துவிடு’ என்று கேட்பதைப் போன்றதாகும் கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு அல்லவை செய்தொழுகும் வேந்து. குடிகளை வருந்தச் செய்யும் செயல்களையே மேற்கொண்டு தீமை செய்து ஆட்சி நடத்துகிற வேந்தன், கொலையையே தொழிலாகக் கொண்டவரிலும் கொடியவனாவான். நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாடொறும் நாடு கெடும். நாட்டிலே நாள்தோறும் ஏற்படும் நிலைமையை ஆராய்ந்து தகுந்தபடி முறைசெய்யாத மன்னவன், நாளுக்கு நாள் தன் நாட்டையும் கெடுத்துவிடுவான் கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச் சூழாது செய்யும் அரசு. மேல் நடப்பதைப் பற்றி கருதாமல், முறை தவறி அரசாளுகின்ற மன்னவன், தன் பொருள் வளத்தையும், நாட்டு மக்களது அன்பையும், ஒருங்கே இழந்து விடுவான் அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை. கொடுங்கோல் ஆட்சியால் அல்லல்பட்ட மக்கள், அதைப் பொறுக்கமாட்டாது அழுத கண்ணீரே, ஓர் அரசனின் செல்வத்தை அழிக்கும் படை ஆகும் துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன் அளியின்மை வாழும் உயிர்க்கு. மழையில்லாத நிலைமை உலகத்துக்கு எத்தகைய துன்பம் தருமோ, அவ்வாறே அரசனின் அருளில்லாத தன்மை, அவன் நாட்டில் வாழ்பவருக்குத் துன்பம் தரும் முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி ஒல்லாது வானம் பெயல். ஆட்சிமுறை கோணி மன்னவன் ஆட்சி செய்தால், பருவ மழையானது தவறிப் போக, மேகமும் வேண்டுங்காலத்து மழை பொழியாது ஒதுங்கிப் போகும் ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின். காவலன் முறையோடு நாட்டைக் காத்து வராவிட்டால், அந்நாட்டிலே பசுக்களும் பால்வளம் குன்றும்; அறு தொழிலோரும் மறைநூல்களை மறப்பார்கள்