Published on 30 Apr 2026
மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.
இல்வாழ்வுக்குத் தகுந்த சிறந்த பண்பு உடையவளாகித் தன்னை மணந்தவனின் வளமைக்குத் தகுந்தபடி நடப்பவளே, சிறந்த வாழ்க்கைத் துணைவியாவாள்
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.
இல்வாழ்வுக்கான சிறப்புகள் அனைத்தும் மனைவியிடம் இல்லையானால், அந்த இல்வாழ்க்கையில் எவ்வளவு சிறப்பிருந்தாலும் அது வாழ்வு ஆகாது
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை?
மனைவி நற்பண்பு உடையவளானால் வாழ்க்கையில் இல்லாதது என்ன? அவள் நற்பண்பு இல்லாதவளானால் வாழ்க்கையில் இருப்பது என்ன?
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.
கற்பு என்னும் மனவுறுதி, இல்லாளிடம் உண்டாயிருந்தால், அந்தப் பெண்ணை விடப் பெருமை மிக்கவை உலகில் யாவை உள்? ஒன்றுமில்லை
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.
தெய்வம் தொழாதவளாய்த் தன் கொழுநனையே தொழுது துயிலெழுகின்ற கற்புடையவள் ‘பெய்’ என்றால், மழையும் பெய்யும்
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.
தன் கற்பு வழுவாமல் காத்துத் தன் கணவனையும் பேணித் தகுதியமைந்த புகழையும் காத்துச் சோர்வு அடையாதவளே பெண்
பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.
கணவனைப் போற்றிக் கடமையைச் செய்யப்பெற்றால் மகளிர் பெரிய சிறப்பை உடைய மேலுலகவாழ்வைப் பெறுவர்.
புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.
புகழைக் காக்க விரும்பும் மனைவி இல்லாதவர்க்கு, இகழ்ந்து பேசும் பகைவர் முன் காளை போல் நடக்கும் பெருமித நடை இல்லை.
மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.
மனைவியின் சிறந்த பண்பே இல்வாழ்வுக்கு மங்கலம்; நல்ல மக்கட்பேறும் உடையதாய் இருத்தல், அதற்கு நல்ல அணிகலன் ஆகும்