Published on 30 Apr 2026
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.
உள்ளதைப் பலருக்கும் பகுத்துக் கொடுத்துப் புகழோடு வாழவேண்டும்; அப்படிப்பட்ட வாழ்வு அல்லாமல் ‘உயிருக்கு ஊதியம்’ என்பது வேறு யாதும் இல்லை
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ்.
புகழ்ந்து சொல்கின்றவர் சொல்பவை எல்லாம் வறுமையால் இரப்பவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவுகின்றவரின் மேல் நிற்கின்ற புகழேயாகும்.
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன் றில்.
உயர்ந்த புகழ் அல்லாமல், உலகத்திலே ஒப்பற்ற ஒரு பொருளாக அழிவில்லாமல் நிலைத்து நிற்கக்கூடியது யாதுமே இல்லை
நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு.
உலகத்தின் எல்லைவரை பரவி நிற்கும் புகழுக்குரிய செயலை ஒருவன் செய்தால், வானுலகமும் தேவரைப் போற்றாது; அப் புகழாளனையே விரும்பிப் போற்றும்
நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது.
புகழால் மேன்மை பெறக்கூடிய கேடும், செத்தும் புகழால் வாழ்ந்திருக்கும் சாவும், அறிவிற் சிறந்தோருக்கு அல்லாமல், பிறருக்கு ஒரு போதுமே கிடையாது
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.
உலகத்தார் முன்பாக ஒருவன் தோன்றினால் புகழோடுதான் தோன்ற வேண்டும்; புகழ் இல்லாதவர் தோன்றுவதை விடத் தோன்றாமற் போவதே நல்லது
வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்.
புகழ் இல்லாதவனுடைய உடம்பைத் தாங்கிக் கொண்டிருந்த பூமியுங் கூட, வசையில்லாத வளமான பயனைத் தருவதில் குறைபாடு அடையும்