Published on 14 Jun 2026
சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து.
என் அழகையும் நாணத்தையும் அவர் தம்மோடு எடுத்துக் கொண்டார்; அதற்குக் கைம்மாறாகக் காமநோயையும் பசலையையும் எனக்குத் தந்துள்ளார்!
உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு.
அவரையே யான் நினைத்திருப்பேன்; அவர் திறங்களைப் பற்றியே பேசுவேன்; அவ்வாறாகவும், பசலையும் வந்து படர்ந்ததுதான் பெரிய வஞ்சனையாய் இருக்கின்றது!
உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்
மேனி பசப்பூர் வது.
அதோ பார், என் காதலர் என்னைப் பிரிந்து போகின்றார்; இதோ பார், அதற்குள்ளேயே என் உடலில் பசலையானது வந்து பற்றிப் படருகின்றது!
விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.
விளக்கின் முடிவை எதிர்பார்த்துத் தான் வரக் காத்திருக்கும் இருளைப் போல, என் தலைவனுடைய தழுவலின் முடிவைப் பசலையும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது
புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு.
தலைவனைத் தழுவியபடியே கிடந்தேன்; பக்கத்தில் சிறிது புரண்டேன்; அந்தப் பிரிவுக்கே பசலையும் அள்ளிக் கொள்வது போல, என் மீது மிகுதியாகப் பரவி விட்டதே
பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்
துறந்தார் அவர்என்பார் இல்.
‘இவள் பசந்தாள்’ என்று என்னைப் பழித்துப் பேசுவது அல்லாமல், இவளைக் காதலர் கைவிட்டுப் பிரிந்தார் என்று பேசுபவர் யாரும் இல்லையே!