Published on 29 Apr 2026
படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.
படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.
அஞ்சாமை, எளியோர்க்குக் கொடுத்து உதவும் ஈகை, அறிவு, ஊக்கம், என்னும் நான்கும் குறைவில்லாமல் இருப்பது வேந்தருக்கு இயல்பு ஆதல் வேண்டும்
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனான் பவர்க்கு.
நாடாளும் மன்னனுக்கு, விரைவாகச் செயலைச் செய்தலும், அதனை அறியும் அறிவும், செய்யும் துணிவும் என்னும் மூன்று திறனும் நீங்காமல் இருக்க வேண்டும்
அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு
அரசநெறியிலிருந்தும் வழுவாமலும், நெறியல்லாதவைகளை நாட்டை விட்டு நீக்கியும், மறமாட்சியில் தாழ்ச்சியின்மை என்னும் மானமும் உடையவனே அரசன்
இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.
பொருள் வருவாய்க்கான வழிகளை உண்டாக்கலும், வரும் பொருளைச் சேமித்தலும், பாதுகாத்தலும், நாட்டின் நலத்துக்குத் தக்கபடி செலவிடுதலும் வல்லதே அரசு
காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்.
தன்னைக் காண வருவார்க்குக் காட்சிக்குத் தான் எளியனாயும், கடுஞ்சொல் சொல்லாதவனாயும் அரசன் விளங்கினால், அவன் நாட்டை உலகமே உயர்வாகக் கூறும்
இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு.
இனிமையான சொல்லோடு, துன்புறுவார்க்கு வேண்டியதைக் கொடுத்தும் காப்பாற்றவல்ல அரசன், தன் மனத்தில் கருதியவாறே உலகமும் அமையும்
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்.
முறைமையோடு ஆட்சி செய்து மக்களைக் காப்பாற்றும் மன்னவன், அம் மக்களுக்குத் தெய்வம் என்று சொல்லப்படும் உயர்நிலையிலே வைத்து மதிக்கப்படுவான்
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.
சான்றோர்கள் கண்டித்துச் சொல்வது கேள்விக்கு வெறுப்பாயிருந்தாலும், பொறுத்து, அக்குறைகளை நீக்கும் பண்புள்ள வேந்தனின் குடைநிழலில், உலகம் தங்கும்
கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி.
கொடையும், இரக்க குணமும், செங்கோன்மையும், குடி காத்தலும் என்னும் நான்கையும் சிறப்பாகப் பெற்றவன் வேந்தர்க்கு எல்லாம் ஒளிவிளக்கு ஆவான்