Published on 11 Apr 2026
பெருமை 1
அன்னைத் தமிழே - என்
ஆவி கலந்தவளே !
என்னை வளர்பவளே!
என்னில் வளர்பவளே!
உன்னைப் புகழ்வதற்கே
உலகில் பிறப்பெடுத்தேன்
சொல்லில் விளையாடச்
சொல்லித் தந்தவளே!
சொல்லில் உனது புகழ்
சொல்ல முடியலையே!
நா. காமராசன்
பெருமை 2
தமிழுக்கும் அமுதென்றுபேர்! – அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! – இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! – இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!
- பாரதிதாசன்
பாடலின் பொருள்
தமிழுக்கு அமுது என்று பெயர். இன்பம் தரும் அந்தத் தமிழ் எங்கள் உயிருக்கு
இணையானது.
தமிழுக்கு நிலவு என்று பெயர். இன்பத்தமிழ் எங்கள் சமூக வளர்ச்சிக்கு
அடிப்படையான நீர் போன்றது.
தமிழுக்கு மணம் என்று பெயர். அது எங்கள் வாழ்விற்காகவே உருவாக்கப்பட்ட
ஊர் ஆகும்.
தமிழ் எங்கள் உயர்விற்கு எல்லையாகிய வானம் போன்றது. இன்பத்தமிழ் எங்கள்
சோர்வை நீக்கி ஒளிரச் செய்யும் தேன் போன்றது.
தமிழ் எங்கள் அறிவுக்குத் துணை கொடுக்கும் தோள் போன்றது.
--------------
புறநானூறு 192
யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர் தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன;
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னாது என்றலும் இலமே; 'மின்னொடு
வானம் தண் துளி தலைஇ, ஆனாது
கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று
நீர் வழிப்படூஉம் புணை போல், ஆர் உயிர்
முறை வழிப்படூஉம்' என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
உலகில் எதுவாயினும் அது வாழத்தக்க ஊர்.
எல்லா மக்களும் உறவினர்.
ஒருவனுக்கு நேரும் தீங்கோ, நன்மையோ பிறர் தந்து வந்தது அன்று.
ஒருவன் வருந்துவதும், வருத்தம் நீங்கித் தணிவதும் அப்படிப்பட்டதுதான்.
ஒருவன் சாவதும் புதிது அன்று.
எனவே கிடைத்திருக்கும் வாழ்க்கையை இனிது என்று மகிழமாட்டேன். வெறுப்பில் ‘வாழ்க்கை துன்ப-மயம்’ என்றும் கூறமாட்டேன்.
வானம் மின்னி மழை பொழிந்து கல்லை உருட்டிக்கொண்டு இரைச்சலுடன் பாயும் வெள்ளத்தில் மிதந்தோடும் தெப்பம் போல நம் உயிர் மிதந்து ஓடும்.
இந்த உண்மையைத் திறம்பெற்றவர் வாழ்க்கையில் கண்டு தெரிந்துகொண்டேன்.
அதனால் சிறப்புற்று விளங்கும் பெரியோரைக் கண்டு வியக்கமாட்டேன். (ஒருவேளை பெரியோரைக் கண்டு வியந்தாலும்)
சிறியோரை இகழவே மாட்டேன்.
--------
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற புகழ்பெற்ற வரி
புறநானூறு (பாடல் 192) – கணியன் பூங்குன்றனார் அவர்களால் இயற்றப்பட்டது —
இது ஐக்கிய நாடுகள் சபை வளாகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
---------
ஒரு மொழி உயிர்ப்போடு வாழ்வதற்குப் பேச்சு மொழியும் காலம் கடந்து வாழ்வதற்கு
எழுத்து மொழியும் தேவைப்படுகின்றன.
பேச்சு மொழியை உலக வழக்கு என்றும், எழுத்து மொழியை இலக்கிய வழக்கு என்றும் கூறுவர்.
பேச்சுமொழியில் உணர்ச்சிக் கூறுகள் அதிகமாக இருக்கும். எழுத்துமொழியில் உணர்ச்சிக் கூறுகள் குறைவு .
மேடைப்பேச்சிலும், வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களிலும் எழுத்து மொழியாகிய இலக்கியத்தமிழே பயன்பட்டு வந்தது. ஆனால் இக்காலத்தில் அந்நிலை பெரும்பாலும் மாறிவிட்டது ; பேச்சுத்தமிழ் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நாளேடுகள் மற்றும் பருவ இதழ்களில் இன்றும் எழுத்துத் தமிழே பயன்படுத்தப்பட்டு வருகிறது. பேச்சுத்தமிழில் காலந்தோறும் ஏற்பட்டு வரும் மாற்றங்களைத் தவிர்க்க இயலாது . ஆனால் ஊடகங்களிலும் இலக்கியங்களிலும் திருத்தமான தமிழையே பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் நம் தாய்மொழியைச் சிதையாமல் காக்க முடியும்.
அணை உடைஞ்சு போன வெள்ளம் அழுதாலும் வராது.
---------
"காதொளிரும் குண்டலமும் கைக்கு வளையாபதியும் கருணை மார்பின்
மீதொளிர் சிந்தாமணியும் மெல்லிடையில் மேகலையும் சிலம்பார் இன்பப்
போதொளிரும் திருவடியும் பொன்முடி சூளாமணியும் பொலியச் சூடி
நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத் தாங்குதமிழ் நீடுவாழ்க"
- கவியோகி சுத்தானந்த பாரதியார்
-------
யுனெஸ்கோவால் பிப்ரவரி 21 “சர்வதேச தாய்மொழி தினம்” ஆக அறிவிக்கப்பட்டது.
------
உலகிலேயே மொழிக்காக
அமைக்கப்பட்ட ஒரே தமிழ் தாய் கோயில்
காரைக்குடியில் அமைந்துள்ளது
------
அன்னை மொழியே - - பாவலரேறு பெருஞ்சித்திரனார்
அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே !
முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!
கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில்
மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!
தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே!
இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே! நற்கணக்கே!
மன்னுஞ் சிலம்பே! மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!
விளக்கம்
அன்னை மொழியே! அழகு நிறைந்த செழுந்தமிழே! பழமைக்கும் பழமையாய்த் தோன்றிய நறுங்கனியே! கடல் கொண்ட குமரிக் கண்டத்தில் நிலைத்து அரசாண்ட மண்ணுலகப் பேரரசே ! பாண்டிய மன்னனின் மகளே! திருக்குறளின் பெரும் பெருமைக்குரியவளே ! பத்துப்பாட்டே! எட்டுத்தொகையே! பதினெண் கீழ்க்கணக்கே! நிலைத்த சிலப்பதிகாரமே ! அழகான மணிமேகலையே! பொங்கியெழும் நினைவுகளால் தலைபணிந்து வாழ்த்துகின்றோம்.
-------
சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் – என்றன்
சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும்
---க. சச்சிதானந்தன்
------
நீங்கள் ஆங்கிலத்திலோ அல்லது பிறமொழியிலோ கல்வி கற்றாலும், நாடு கடந்து சென்று மிக பெரிய பதவியில் அமர்ந்தாலும், உங்களோடு ஒட்டிக்கொண்டு வருவது, தமிழ்தாய் பெற்றுஎடுத்த "தமிழன்" என்ற அடைமொழி அல்லவா. அந்த தமிழ் தாயை கொஞ்சம் திரும்பி பார்க்கமாட்டாயா. அந்த தமிழ் தாய் ஒரு ஏக்கத்தோடு பார்க்கிறாள் "தமிழில் பேசி என்னை பெருமைப்படுத்தமாட்டியா" என்று.
------