Published on 30 Apr 2026
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.
அன்புக்கு அடைத்து வைக்கும் தாழ் எதுவும் உண்டோ? அன்புடையாரின் சிறு கண்ணீரே அவர் அன்பினைப் பலர் அறிய வெளிப்படுத்திவிடும்
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
அன்பில்லாதவர் எல்லாமே தமக்கு உரிமை என்று நினைப்பர்; அன்பு உடையவரோ தம் எலும்பையும் பிறருக்கு உரியதாக்கி மகிழ்வர்
அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு.
அன்பு பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்: அஃது எல்லாரிடத்தும் நட்பு என்றுசொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும்
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.
இவ்வுலகத்திலே இன்பம் அடைந்தவர் அடையும் சிறப்பு, அவர் அன்புடையவராகப் பொருந்தி வாழ்ந்த வாழ்க்கையின் பயனே என்பர்
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.
அறத்திற்கே அன்பு துணையாகும் என்று சொல்பவர் அறியாதவர்; ஆராய்ந்தால் மறச்செய்கைகளுக்கும் அன்பே துணையாயிருக்கும்
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.
உள்ளத்திலே அன்பு இல்லாதவருடைய இல்வாழ்க்கையானது, வன்மையான பாலை நிலத்திலே காய்ந்த மரம் தளிர்த்தாற் போல நிலையற்றதாம்
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.
உயிர்நிலை என்பது அன்பின் வழியாக அமைந்ததே; அஃது இல்லாதவருக்கு எலும்பைத் தோலால் போர்த்த உடம்பு மட்டுமேயாகும்