Published on 26 Apr 2026
தமிழர் பெருவிழா
விரும்பிக் கொண்டாடுவது விழா எனப்படும்.
உறவுகள் ஒன்று கூடிக்கொண்டாடும் விழாக்கள் மனத்திற்கு மகிழ்வைத்தரும்; மனிதரிடையே ஒற்றுமையை வளர்க்கும்.
தமிழரின் நாகரிகம், வீரம் ஆகியவற்றை எடுத்துக்காட்டும் வகையில் பல விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
விழாக்கள் நமது பண்பாட்டை அடுத்த தலைமுறையினருக்குக் கொண் டு சேர்க்கின்றன.
இயற்கையோடு இணைந்து வாழ்வதே தமிழரின் வாழ்க்கைமுறை ஆகும்.
இயற்கையை வணங்குதல் தமிழர் மரபு. தமிழர் கொண்டாடும் பல விழாக்கள் இயற்கையைப் போற்றும் வகையிலேயே அமைந்து இருக்கின்றன. அவற்றுள் சிறப்பானது பொங்கல் விழா ஆகும்.
கதிரவனுக்கு நன்றி கூறிச் சிறப்புச் செய்யும் விழா பொங்கல் விழா. உழவர்கள் ஆடித்திங்களில் விதைப்பர். தைத்திங்களில் அறுவடை செய்து பயன் அடைவர். தைத்திங்களின் முதல் நாளில் பொங்கலிட்டு வழிபடுவர். எனவே, இத்திருவிழாவை அறுவடைத்திருவிழா என்றும் அழைப்பர்.
உழவர்கள் இயற்கைக்கும் தம்முடன் உழைத்த கால்நடைகளுக்கும் இந்நாளில் நன்றி தெரிவித்து மகிழ்கின்றனர். எனவே, இவ்விழாவை உழவர் திருநாள் என்றும் கூறுவர்.
---------
அறுவடைத் திருநாள் ஆந்திரம், கர்நாடகம், மராட்டியம், உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மகரசங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.
பஞ்சாப் மாநிலத்தில் லோரி என்று கொண்டாடப்படுகிறது.
குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் உத்தராயன் என்று கொண்டாடப்படுகிறது.
No tags available