Published on 19 May 2026
அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்.
அறச்செயல் என்பது யாதென்றால் எந்த ஓர் உயிரையும் கொல்லாத செயலே; கொல்லும் செயல் பிற தீவினைகளை எல்லாம் கொண்டு வரும்
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.
கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.
நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி.
நல்ல ஒழுக்கம் எனப்படுவது யாதென்றால், எந்தவொரு உயிரையும் கொலை செய்யாமலிருத்தல் என்பதைக் கருதும் வாழ்க்கை நெறியே ஆகும்
நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை.
வாழ்வின் நிலையாமை கண்டு பற்றுவிட்டவருள் எல்லாம், கொலைப் பாவத்திற்குப் பயந்து, கொல்லாமை நெறியைப் போற்றுபவரே சிறந்தவர்கள்
தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை.
தன்னுடைய உயிரையே விட்டுவிட நேர்வதானாலும் கூட, தான் மற்றொன்றினது இனிய உயிரைப் போக்கும் பாவச் செயலை எவரும் செய்யக் கூடாது
நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கங் கடை.
கொலை செய்வதனாலே நன்மையாக வந்து சேரும் ஆக்கம் பெரிதானாலும், சான்றோருக்குக் கொன்று வரும் ஆக்கம் இழிவானதே யாகும்
உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்.
நோய் மிகுந்த உடலோடு உயிரும் போகாமல் வருந்தித் துன்புறுகின்ற வாழ்வை உடையவர், பிற உயிர்களை அவற்றின் உடலிலிருந்து போக்கியவரேயாவர்
No tags available