Published on 20 May 2026
ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார்.
நல்ல குடியிலே பிறந்தவர்கள், தம் குடிக்கு உரிய நல்ல ஒழுக்கங்கள், வாய்மை காத்தல், பழிக்கு அஞ்சி நாணுதல் என்னும் மூன்றிலும், ஒரு போதுமே தவறமாட்டார்கள்
நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு.
உண்மையான உயர்குடியில் பிறந்தவர்க்கு முகமலர்ச்சி, ஈகை, இனிய சொல், பிறரை இகழ்ந்து கூறாமை ஆகிய நான்கும் நல்லப் பண்புகள் என்பர்.
அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்.
பலவாக அடுக்கிய கோடி அளவுக்குப் பொருள் பெற்றாலும், நல்ல குடியிலே பிறந்தவர்கள், தம் குடிப்பெருமைக்குக் குறைவான எதனையும் செய்ய மாட்டார்கள்
சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்தும்என் பார்.
‘வசையில்லாமல் வருகின்ற நம் குடி மரபினோடு ஒத்து வாழக் கடவோம்’ என்று கருதி வாழ்பவர்கள், வறுமையிலும் தகுதி குறைந்ததைச் செய்ய மாட்டார்கள்
குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.
உயர் குடியிலே பிறந்தவர்களிடம் தோன்றும் குற்றம், அளவால் சிறிதானாலும், விசும்பிடத்து மதியிலே தோன்றும் மறுவைப் போல உலகத்தாரால் அறியப்படும்
நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.
நிலத்தின் இயல்பினை அதனிடம் முளைத்த முளை காட்டும்; அவ்வாறே, நல்ல குலத்தில் பிறந்தவர்களது இயல்பினை அவர் வாய்ச்சொற்கள் எடுத்துக் காட்டும்