Learning through listening

Published on 29 Apr 2026


கேள்வி

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை. 

கேள்வியால் அடைகின்ற அறிவே செல்வங்களுள் சிறந்த செல்வம் ஆகும்; அந்தக் கேள்விச் செல்வம் பிற செல்வங்களுள் எல்லாம் முதன்மையானதும் ஆகும் 

செவுக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.

செவிக்கு உணவான கேள்வி இல்லாதபொழுது, உடலைக் காப்பதன் பொருட்டாக வயிற்றுக்கும் சிறிதளவான உணவு அறிவுள்ளவரால் தரப்படும்

செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து. 

செவியுணவு ஆகிய கேள்வியை உடையவர், இவ்வுலகத்தில் இருப்பவரானாலும், அவியுணவை ஏற்றுக் கொள்ளும் வானுலகத்துத் தேவர்களோடு ஒப்பாவார்கள்

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை.

தான் முயன்று கற்கவில்லை என்றாலும், கற்றவரிடம் கேட்டாவது அறிவு பெற வேண்டும்; அது ஒருவன் தளர்ச்சி அடையும்போது ஊன்றுகோல் போலத் துணையாகும்

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.

நல்ல ஒழுக்கம் உடையவரது வாய்ச்சொற்கள், வழுக்கும் சேற்றில் வழுக்காமல் செல்ல உதவும் ஊன்றுகோல் போல ஒருவனுக்கு எப்போதும் உதவியாக விளங்கும்

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும். 

எவ்வளவு சிறிது என்ற போதும் நல்ல பேச்சுக்களையே கேட்கவேண்டும்; அது அந்த அளவுக்கேனும் சிறந்த பெருமையைக் கேட்டவனுக்குத் தவறாமல் தரும். 

பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர். 

நுட்பமாகக் கற்றுணர்ந்த அறிவோடு கேள்வியறிவும் உடையவர்கள், பிறழ ஒன்றை உணர்ந்தாலும், தமக்குப் பேதைமை தருகின்ற சொற்களைச் சொல்லமாட்டார்கள்

கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி.

கேள்வியறிவால் துளைக்கப் படாத செவிகள், ( இயற்கையான துளைகள் கொண்டு ஓசையைக்) கேட்டறிந்தாலும் கேளாத செவிட்டுத் தன்மை உடையனவே.

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்.

கேள்வியாகிய அறிவுச் சுமையை உணராது, வாயால் அறியும் நாக்கின் சுவையுணர்வு மட்டுமே கொண்டவர்கள் இறந்தாலும் வாழ்ந்தாலும் ஒன்றுதான்

நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
 வாயினர் ஆதல் அரிது.

நுட்பமான கேள்வியறிவு இல்லாதவர், அடக்கமான சொற்களைப் பேசுவது அரிது.

 

🏷️ Tags:
learninglistening

📰 Related Articles