Published on 29 Apr 2026
அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்.
அறிவு நிரம்புவதற்குக் காரணமானக் நூல்களைக் கற்காமல் கற்றவரிடம் சென்று பேசதல், சூதாடும் அரங்கு இழைக்காமல் வட்டுக்காயை உருட்டிஆடினார் போன்றது.
கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று.
கல்லாதவன், தானும் அவையிற் பேசவேண்டும் என்று விரும்புதல், முலைகளிரண்டும் இல்லாதவளான பெண் பெண்மையை விரும்புதல் போன்ற அறியாமை ஆகும்
கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்.
கற்றவர்களின் முன்பாகச் சென்று சொல்லாடாதிருந்தால், கல்லாதவர்களும், அந்த அளவுக்கு மிகவும் நல்லவர்களாகவே கற்றவரால் கருதப்படுவர்
கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார்.
கல்லாதவனது அறிவு சில சமயங்களிலே மிகவும் நன்றாயிருந்தாலும், அறிவுடையவர்கள் அதனை நன்றென்று ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்.
கல்லாத ஒருவன், தன்னையும் கற்றவர் போல மதித்துக் கொண்டு சொல்லாடினால், அவனுக்கு இயல்பாக உள்ள மதிப்பும் கெட்டுப் போய்விடும்
உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர்.
‘உயிரோடு இருக்கின்றார்’ என்னும் அளவினரே அல்லாமல், எந்தப் பயனும் இல்லாத களர்நிலத்தைப் போன்றவர்களே கல்லாதவர் ஆவர்
நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று.
ஒருவனுக்கு நுட்பமாக ஆராயும் அறிவு இல்லாவிட்டால், அவனுடைய வெளிப்புற அழகும் உடல் நலமும் அலங்கரிக்கப்பட்ட மண் பொம்மையைப் போன்றது. மண் பொம்மை வெளியில் அழகாக இருந்தாலும், அதற்கு உயிரோ அறிவோ இல்லை. அதுபோல, அறிவில்லாதவரின் அழகு பயனற்றதாகும்.
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு.
கல்வியறிவு உடைய நல்லவரிடம் உள்ளதான வறுமையை விடக் கல்லாதவரிடம் சேர்ந்த அளவற்ற செல்வமானது பெரிதும் துன்பம் தருவதாகும்
மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு.
உயர்ந்த குலத்தில் பிறந்தவர்களாக இருந்தாலும் கல்வி கற்காதவர்கள், தாழ்ந்த குலத்தில் பிறந்திருந்தாலும் கல்வி கற்றவர்களுக்குச் சமமாக இருக்க முடியாது.
விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்.
சிறந்த கல்வி நூல்களைக் கற்றவர்களுடன் ஒப்பிடும்போது, கல்வி கற்காத மனிதர்கள் விலங்குகளுக்குச் சமமானவர்கள்.