How Tamil language developed

Published on 16 May 2026


மனிதன் தோன்றிய காலத்தில் தனது தேவைகளையும் கருத்துகளையும் மற்றவர்களுக்குத் தெரிவிக்கச் சைகைகளைப் பயன்படுத்தினான். 

காலப்போக்கில் தனது குரலைப் பயன்படுத்தி ஒலிகள் மூலம் தனது கருத்துகளை வெளிப்படுத்த முற்பட்டான். 

அடுத்துச் சிறிது சிறிதாகச் சொற்களை சொல்லக் கற்றுக்கொண்டான் அச்சொற்கள் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டதால் செம்மைப்பட்டன. காலப்போக்கில் அவை பண்பட்டுப் பேச்சுமொழி உருவானது. 

மனிதன் தனக்கு எதிரே இல்லாதவர்களுக்கும் பின்னால் வரும் தலைமுறையினருக்கும் தனது கருத்துக்களைத் தெரிவிக்க விரும்பினான். அதற்காகப் பாறைகளிலும் குகைச் சுவர்களிலும் தன் எண்ணங்களைக் குறியீடுகளாகப் பொறித்து வைத்தான். இதுவே எழுத்து வடிவத்தின் தொடக்க நிலை ஆகும். 

தொடக்க காலத்தில் எழுத்து என்பது ஒலியையோ வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தது. இவ்வரி வடிவத்தை ஓவிய எழுத்து என்பர்.

அடுத்ததாக ஒவ்வொரு வடிவமும் அவ்வடிவத்துக்கு  உரிய முழு ஒலியாகிய சொல்லைக் குறிப்பதாக மாறியது. அதன் பின் ஒவ்வொரு வடிவமும் அச்சொல்லின் ஓசையைக் குறிப்பதாயிற்று. இவ்வாறு ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை ஒலி எழுத்து நிலை என்பர். 

இன்று உள்ள எழுத்துகள் ஒரு காலத்தில் பொருள்களின் ஓவியமாக இருந்தவற்றின் திரிபுகளாகக் கருதப்படுகின்றன. 

பழங்காலத்தில் கற்பாறை, செப்பேடு, ஓலை போன்றவற்றில் எழுதினர். அந்தந்த பொருள்களின் தன்மைக்கு ஏற்ப எழுத்துகளின் வடிவங்கள் அமைந்தன. பாறைகளில் செதுக்கும்போது வளைகோடுகளைப் பயன்படுத்த முடியாது என்பதால் நேர்கோடுகள் பயன்படுத்தப்பட்டன. ஓலைகளில் நேர்கோடுகளையும் புள்ளிகளையும் எழுதுவது கடினம் என்பதால் வளைகோடுகளை அதிகமாகப் பயன்படுத்தினர். 

சில எழுத்துக்களை அழகுபடுத்துவதற்காக அவற்றின் மேற்பகுதியில் குறுக்குக்கோடு இடப்பட்டது. பின்னர் அவையே நிலையான வடிவங்களாக அமைந்துவிட்டன. 

தமிழ் எழுத்துக்களில் மிகப்பெரும் சீர்திருத்தத்தை செய்தவர் வீரமாமுனிவர்

இருப்பதாம் நூற்றாண்டு வரை சில எழுத்துக்களை நாம் உபயோகித்து வந்தோம், இவற்றை அச்சு கோர்ப்பதற்காக இவ்வெழுத்துகளுக்கு தனி அச்சுகள் உருவாக்கப்பட வேண்டி இருந்தது. இக்குறைகளை நீக்குவதற்காக தந்தை பெரியார் எழுத்து சீர்திருத்தம் செய்தார்.

🏷️ Tags:
Tamil Language

📰 Related Articles