Published on 30 Apr 2026
தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளில் ‘விருந்தோம்பல்’ முதன்மையானதாகும். தமக்கு இல்லாவிட்டாலும் இருப்பதை விருந் தினருக்குத் தந்து மகிழ்ந்த நிகழ்வுகளைத் தமிழ் இலக்கியங்கள் பேசுகின்றன.
மாரியொன்று இன்றி வறத்திருந்த காலத்தும்
பாரி மடமகள் பாண்மகற்கு - நீர்உலையுள்
பொன்திறந்து கொண்டு புகாவாக நல்கினாள்
ஒன்றுறா முன்றிலோ இல்
- முன்றுறை அரையனார்
பாடலின் பொருள்
மழையின்றி வறட்சி நிலவிய காலத்தில், பாரி மகளிரான அங்கவை, சங்கவை ஆகியோரிடம் பாணர்கள் இரந்து நின்றனர். பாரிமகளிர் உலைநீரில் பொன் இட்டு அவர்களுக்குத் தந்தனர். அதனால், பொருள் ஏதும் இல்லாத வீடு எதுவும் இல்லை என்பதை அறியலாம்.
பழமொழி நானூறு நூலின் ஆசிரியர் முன்றுறை அரையனார் ஆவார். இவர் கி.பி. (பொ.ஆ.) நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்பர் . பழமொழிநானூறு நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல் மூலம் இவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர் என அறியமுடிகிறது.
பழமொழி நானூறு பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இது நானூறு பாடல்களைக் கொண்டது. ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழி இடம் பெற்றிருப்பதால் இது பழமொழி நானூறு என்னும் பெயர்பெற்றது.
------
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.
விருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவாமருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தக்கது அன்று
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.
நாள்தோறும் தன்னை நாடி வரும் விருந்தினரைப் போற்றுகிறவனுடைய இல்வாழ்க்கை துன்பத்தால் பாழ்படுதல் என்றும் இல்லையாகும்
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.
முகமலர்ச்சியோடு நன்முறையில் விருந்தினரைப் பேணுகிறவன் வீட்டிலே, உளமலர்ச்சியோடு திருமகள் அகலாது தங்கியிருப்பாள்
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.
விருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ?
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.
பொருள் உடைமையுள்ளும் ‘இல்லாமை’ என்பது, விருந்தோம்பலைப் பேணாத மடமையே; அஃது அறிவற்றவரிடமே உளதாகும்
------
விருந்து போற்றுதும்!
தம் வீட்டுக்கு வரும் விருந்தினரை முகமலர்ச்சியோடு வரவேற்று உண்ண உணவும் இருக்க இடமும் கொடுத்து அன்பு பாராட்டுவதே விருந்தோம்பல். விருந்தினர் என்றால் உறவினர் என்று இக்காலத்தினர் கருதுகின்றனர். உறவினர் வேறு, விருந்தினர் வேறு. முன்பின் அறியாத புதியவர்களுக்கே விருந்தினர் என்று பெயர். ‘விருந்தே புதுமை’ என்று தொல்காப்பியர் கூறியுள்ளார்.
அறவுணர்வும் தமிழர் மரபும்
திருவள்ளுவர் இல்லறவியலில் 'விருந்தோம்பலை வலியுறுத்த ஓர் அதிகாரத்தையே' அமைத்திருக்கிறார் ;
இல்லறம் புரிவது விருந்தோம்பல் செய்யும் பொருட்டே என்கிறார்; முகம் வேறுபடாமல் முகமலர்ச்சியோடு விருந்தினரை வரவேற்க வேண்டும் என்பதை “மோப்பக் குழையும் அனிச்சம்” என்ற குறளில் எடுத்துரைக்கிறார்.
“…………………….. தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை ”
- சிலப்பதிகாரம்
என்று கண்ணகி வருந்துகிறாள். கோவலனைப் பிரிந்து வாழும் கண்ணகி அவனைப் பிரிந்ததைவிட விருந்தினரைப் போற்ற முடியாத நிலையை எண்ணியே வருந்துவதாகக் குறிப்பிடுவதன்மூலம் விருந்தினரைப் போற்றிப் பேணல் பழந்தமிழர் மரபு என்பதை இளங்கோவடிகள் உணர்த்துகிறார்.
கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள், விருந்தும் ஈகையும் செய்வதாகக் கம்பர் குறிப்பிட்டுள்ளார்.
"பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்
வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும்
விருந்தும் அன்றி விளைவன யாவையே"
- கம்பராமாயணம்
கலிங்கத்துப்பரணியிலும் செயங்கொண்டார் விருந்தினர்க்கு உணவிடுவோரின் முகமலர்ச்சியை உவமையாக்கியுள்ளார்.
"விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண
மேன்மேலும் முகமலரும் மேலோர் போல"
- கலிங்கத்துப்பர ணி
தனித்து உண்ணார்
தனித்து உண்ணாமை என்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை. அமிழ்தமே கிடைத்தாலும் தாமே உண்ணாது பிறருக்கும் கொடுப்பர் நல்லோர்; அத்தகையோரால்தான் உலகம் நிலைத்திருக்கிறது என்பதை ,
“உண்டால் அம்ம, இவ்வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத்
தமியர் உண்டலும் இலரே…….. ”
- புறநானூறு
என்று கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி குறிப்பிட்டுள்ளார்.
அல்லில் ஆயினும்
விருந்தோம்பல் என்பது பெண்களின் சிறந்த பண்புகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. நடு இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உணவிடும் நல்லியல்பு குடும்பத் தலைவிக்கு உண்டு. இதை
“அல்லில் ஆயினும் விருந்து வரின்
உவக்கும்”
என்று நற்றிணை (142) குறிப்பிடுகிறது.
இன்மையிலும் விருந்தோம்பல்
வீட்டிற்கு வந்தவருக்கு வறிய நிலையிலும் எவ்வழியிலேயேனும் முயன்று விருந்தளித்து மகிழ்ந்தனர் நம் முன்னோர். தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குத்தியெடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி. இதனை
குரல்உணங்கு விதைத் தினை உரல்வாய்ப் பெய்து
சிறிது புறப்பட்டன்றோ இலள்
என்று புறநானூறு (333) காட்சிப்ப டுத்துகிறது.
நிலத்திற்கேற்ற விருந்து
நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்றுக் குழல் மீன் கறியும் பிறவும் கொடுத்தனர் என்கிறது சிறுபாணாற்றுப்படை.
விருந்தை எதிர்கொள்ளும் தன்மை
இல்லத்தில் பலரும் நுழையும் அளவிற்கு உள்ள பெரிய வாயிலை இரவில் மூடுவதற்கு முன்னர், உணவு உண்ண வேண்டியவர்கள் யாரேனும் உள்ளீர்களா ? என்று கேட்கும் வழக்கம் இருந்ததை,
“பலர்புகு வாயில் அடைப்ப க் கடவுநர்
வருவீர் உளீரோ”
என்ற குறுந்தொகை அடிகள் புலப்படுத்துகின்றன.
“மருந்தே ஆயினும் விருந்தொடு உண்” என்று கொன்றை வேந்தனில் ஔவையார் பாடியுள்ளார். அவர் பாடிய தனிப்பாடலில்,
“வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்
முரமுரெனவே புளித்த மோரும் – திறமுடனே
புள்வேளூர்ப் பூதன் புரிந்துவிருந்து இட்டான்ஈ(து)
எல்லா உலகும் பெறும்”
என்று அவர் கூறுவதிலிருந்து வள்ளல்களால் விருந்தினர் போற்றப்பட்டதை அறியமுடிகிறது.
உற்றாரோடு நின்ற விருந்து . . .
சங்க காலத்திலிருந்தே அரசராயினும் வறியோராயினும் விருந்தினர்களைப் போற்றினர். கால மாற்றத்தில் புதியவர்களாகிய விருந்தினர்களை வீட்டுக்குள் அழைத்து உணவிடுவது குறைந்தது. விருந்து புரப்பது குறைந்ததால் சத்திரங்கள் பெருகின. நாயக்க ர், மராட்டியர் ஆட்சிக் காலங்களில் மிகுதியான சத்திரங்கள் வழிச்செல்வோர்க்காகக் கட்டப்பட்டன.
புதியவர்களான விருந்தினர்களை ஏற்பது குறைந்துவிட்ட காலத்தில், ஓரள வு தெரிந்தவர்களை மட்டுமே விருந்தினர்களாக ஏற்றனர். படிப்படியாக உற்றார் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரையே விருந்தினர்களாகப் போற்றும் நிலைக்கு மாறினர்.
விருந்தோம்பல் இன்றும். . .
புதியதாக வருவோர் இரவில் தங்குவதற்கு வீட்டின் முன்புறம் திண்ணையும் அதில் தலை வைக்கத் திண்டும் அமைத்தனர் முன்னோர். இன்று வீட்டுக்குத் திண்ணை வைத்துக் கட்டுவதுமில்லை; அறிமுகமில்லாத புதியவர்களை விருந்தினர்களாக ஏற்பதுவும் இல்லை. இருப்பினும் திருவிழாக் காலங்களில் ஊருக்கு வரும் புதியவர்களையும் அழைத்து அன்போடு விருந்தளிப்பதைச் சில இடங்களில் காணமுடிகிறது.
திருமணத்தை உறுதிசெய்தல், திருமணம், வளைகாப்பு , பிறந்தநாள் , புதுமனை புகுவிழா போன்றவற்றை இல்ல விழாக்களாகவே கொண்டாடினர். அப்போது மிகுதியான விருந்தினர்களை வரவேற்று உணவளித்து மகிழ்ந்தனர். அந்த இல்லவிழா நாள்களில் அப்பகுதிவாழ்மக்களும் வெளியூர் விருந்தினர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்தனர்.
காலப்போக்கில் வீட்டில் நடைபெற்ற விழாக்கள் திருமணக் கூடங்களுக்கு இடம்பெயர்ந்து விட்டன. ப ண்பாட்டு மாற்றமாக இன்று சில இடங்களில் விருந்தினர்களை வரவேற்பது முதல் பந்தியில் உபசரித்து வழியனுப்பும்வரை ‘திருமண ஏற்பாட்டாளர்’களே செய்யும் விருந்தோம்பல் நடைபெறுவதைக் காணமுடிகிறது.
பண்டைத் தமிழர் இல்லங்களிலும் உள்ளங்களிலும் விருந்தோம்பல் பண்பாடு செழித்திருந்தது . அந்த உயரிய தமிழ்ப் பண்பாடு இன்றைய தமிழர்களிடம் மேற்கூறிய முறைகளில் பின்பற்றப்ப டுகின்றது.
-------
விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்
வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்
திருந்துற நோக்கல் வருக என உரைத்தல்
எழுதல் முன் மகிழ்வன செப்பல்
பொருந்து மற்றுஅவன் தன்அருகுற இருத்தல்
போமெனில் பின் செல்வதாதல்
பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன் பான்
ஒழுக்கமும் வழிபடும் பண்பே
--இல்லொழுக்கம்
விளக்கம்
விருந்தினராக ஒருவர் வந்தால்,
அவரை வியந்து உரைத்தல்
நல்ல சொற்களை இனிமையாகப் பேசுதல்
முகமலர்ச்சியுடன் அவரை நோக்குதல்
'வீட்டிற்குள் வருக' என்று வரவேற்றல்
அவர் எதிரில் நிற்றல்
அவர்முன் மனம் மகிழும்படி பேசுதல்,
அவர் அருகிலேயே அமர்ந்துகொள்ளுதல்,
அவர் விடைபெற்றுச் செல்லும்போது வாயில்வரை பின் தொடர்ந்து செல்லல்,
அவரிடம் புகழ்ச்சியாக முகமன் கூறி வழியனுப்புதல்
ஆகிய ஒன்பதும் விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கமாகும்.