Published on 19 May 2026
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு.
உலகினரால் இகழப்படாமல் வாழ விரும்புகின்றவன் எத்தகைய பொருளையும் களவாடிக் கொள்ள நினையாதபடி தன் மனத்தை முதலில் காத்தல் வேண்டும்
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்.
களவாலே வந்தடையும் செல்வமானது அளவு கடந்து பெருகுவது போலவே, எதிர்பாராமல், எல்லாம் வந்தது போல, விரைந்து ஒழிந்தும் போய்விடும்
அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்.
களவு அல்லாத, பிற நல்ல முயற்சிகளைச் செய்து பொருள் தேடி வாழ்தலைத் தெளியாதவர்கள், அளவு கடந்த செலவுகளைச் செய்து அக்களவாலேயே அழிவர்
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்.
‘பிறன் பொருளைக் கள்ளமாகக் களவாடிக் கொள்வோம்’ என்று ஒருவன், தன் உள்ளத்தால் நினைத்தாலும் அந்த நினைவு கூடத் தீமையானதே
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்.
களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் ஒருவனுக்கு உள்ள மிகுந்த விருப்பம், பயன் விளையும் போது தொலையாதத் துன்பத்தைத் தரும்.
அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்.
களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் மிக்க விருப்பம் உடையவர், அளவு (சிக்கனம்) போற்றி வாழும் நெறியில் நின்று ஒழுக மாட்டார்.
களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண்ட இல்.
களவு என்பதற்கு காரணமான மயங்கிய அறிவு உடையவராயிருத்தல், அளவு அறிந்து வாழ்தலாகிய ஆற்றலை விரும்பினவரிடத்தில் இல்லை
அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு.
அளவறிந்து வாழ்தலை அறிந்தவரின் நெஞ்சத்திலே ‘அறம்’ நிற்பது போல, களவுத்தொழிலை அறிந்தவரின் நெஞ்சிலே ‘வஞ்சகம்’ எப்போதும் நிலைத்திருக்கும்
No tags available