Published on 29 Apr 2026
பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு.
நாளுக்குநாள் பெருகும் வறுமைத் துயரமானது ஒருவனது அறிவைக் கெடுத்தலைப் போல, மறதியானது, ஒருவனது புகழையும் தவறாமல் கெடுத்து விடும்
அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு.
அச்சம் உடையவர்களுக்கு அரண்காவல் இருந்தும் பயனில்லை, அவ்வாறே மறதி உடையவர்களுக்கு நல்ல செல்வநலம் இருந்தாலும் அதனால் பயன் இல்லை
முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை
பின்னூறு இரங்கி விடும்.
துன்பம் வருவதற்கு முன்னதாகவே தன்னைக் காத்துக் கொள்ளாமல் மறதியாக இருந்தவன், பின்னர்த் துன்பம் வந்த போது, தன்பிழையை நினைத்து வருந்துவான்
அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்
கருவியால் போற்றிச் செயின்.
மறவாமை என்னும் கருவியினாலே எதனையும் பேணிச் செய்தால், செய்வதற்கு அரியன என்று நினைத்துக் கைவிடும் செயல்களும் இல்லையாகும்
இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.
தாம், தம்முடைய மகிழ்ச்சியினாலே செருக்கடையும் போது, முன்னர் அப்படிப்பட்ட மகிழ்ச்சியினாலே மறதியடைந்து கெட்டழிந்தவர்களை நினைத்துப் பார்க்க வேண்டும்
உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின்.
தான் அடையக் கருதியதை இடைவிடாமல் மறதியின்றி நினைக்கக் கூடுமானால், ஒருவன், தான் நினைத்ததை அடைதல் என்பது எளிதாயிருக்கும்