Published on 20 May 2026
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை
உழவின் வருத்தத்தைக் கண்டு, பிற தொழில்களைச் செய்து திரிந்தாலும், முடிவில் ஏருடையவரையே உலகம் உணவுக்கு எதிர்பார்த்தலால், உழவே மிகவும் சிறந்தது
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.
உழவை விட்டுப் பிற தொழில்களைச் செய்வாருக்கும் உணவுப் பொருள்களைத் தந்து தாங்குவதனால், உழுதொழில் செய்வாரே உலகத்தாருக்கு அச்சாணி ஆவார்
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.
யாவரும் உண்ணுவதற்கு உணவைத் தந்து, தாமும் உண்டு வாழ்பவரே உரிமை வாழ்வினர்; மற்றையவர் பிறரைத் தொழுது உண்டு, அவர் பின் செல்கின்றவரே யாவர்
பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்.
நெல் வளம் உடைய தண்ணளி பொருந்திய உழவர், பல அரசரின் குடை நிழல்களையும் தம் குடையின் கீழ் காணவல்லவர் ஆவர்.
இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்.
உழவரான முயற்சியைச் செய்து உண்பதனையே இயல்பாக உடையவர், பிறரைத் தாம் இரவார்; தம்பால் வந்து இரப்பவர்க்கும் அவர் வேண்டியதைத் தருவார்கள்
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை.
உழவர்களின் கை உழாது மடங்கிவிடுமானால், ‘யாவரும் விரும்பும் உண்வையும் கைவிட்டோம்’ என்று துறந்தவர்க்கும், அவ்வறத்தில் நிலைத்து நிற்க முடியாது
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.
ஒரு பலப் புழுதியானது காற்பலமாக ஆகும்படி உழுது காய விடுவானானால், அதனிடம் செய்த பயிர், ஒரு பிடி எருவு இடுதலையும் வேண்டாமலே நன்றாக விளையும்
ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு.
பலகால் உழுதலினும், எருப்பெய்து வளப்படுத்துதல் சிறந்தது; இவ்விரண்டும் செய்து களையும் எடுத்தபின், பயிரைக் காத்தல், நீர் பாய்ச்சுவதிலும் நல்லதாகும். (களைக்கொல்லி உபயோகிப்பதால் நுண்ணுயிரிகள் அழிகின்றன, நரிகள் அழிந்துபோயின, மயில்கள் பெருகின, குரங்குகள் தொந்தரவு அதிகமாயிப்போனது.இன்னைக்கு பயிறுகளை காப்பதே மிகப்பெரிய போராட்டமாகிப்போனது)
செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்.
நிலத்துக்கு உரியவன் நாள்தோறும் சென்று பார்த்து, வேண்டியவை செய்யாது சோம்பினால், அந்த நிலமும், அவன் மனைவியைப் போல, அவனோடு பிணங்கி விடும்
இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்.
‘யாம் வறியோம்’ என்று சொல்லிச் சோம்பியிருப்பவரைக் கண்டால், நிலமகள் என்று உயர்த்திப் பேசப்படும் நல்லாள் தன்னுள்ளே சிரித்துக் கொள்வாள்
No tags available