Published on 30 Apr 2026
அறங்கூறா னல்ல செயினும் ஒருவன்
புறங்கூறா னென்றல் இனிது
அறத்தைப் பற்றி வாயாலும் சொல்லாதவனாய், ஒருவன் தீய செயல்களையே செய்து வந்தாலும், ‘அவன் பிறனைப் பழித்துப் புறங்கூறாதவன்’ என்பது இனிதாகும்
அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை.
அறத்தையே அழித்துத் தீமைகளைச் செய்து வருவதைக் காட்டிலும், இல்லாதபோது ஒருவனைப் பழித்துப் பேசி, நேரில் பொய்யாகச் சிரிப்பது தீமையாகும்
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூற்றும் ஆக்கத் தரும்.
பிறர் இல்லாத போது அவரைப் புறங்கூறிப் பொய்யாக நடந்து உயிர் வாழ்தலை விட, இறந்து போதல், அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைத் தரும்
கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்நோக்காச் சொல்.
நேரில் நின்று இரக்கம் இல்லாமல் கடுமையாகப் பேசினாலும் பேசுக; நேரில் இல்லாத போது பின்விளைவைக் கருதாமல் எந்தப் பழியையும் எடுத்துச் சொல்லக் கூடாது
அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும்.
அறநூல்கள் கூறும் உள்ளமுள்ளவனாக ஒருவன் இல்லாத தன்மையினை, அவன் புறங்கூறுகின்றதான அந்த இழி செயலால் தெளிவாக அறியலாகும்
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்.
‘மகிழ்ச்சியாகப் பேசி நட்புக் கொள்ளுதல் நன்மை’ என்று தெளியாதவரே, பிறர் தம்மைவிட்டு விலகுமாறு பழித்துப் பேசி, தமக்குள்ள நண்பரையும் பிரித்து விடுவர்
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு.
நெருங்கிய நட்பினரின் குற்றத்தையும் புறத்தே பேசித் தூற்றும் இயல்பினர், அயலாரிடத்து எப்படி மோசமாக நடந்து கொள்வார்களோ?
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.
அயலாரின் குற்றங்களைக் காண்பது போலவே தம் குற்றங்களையும் காண்பாரானால், நிலைபெற்ற உயிர்கட்கு எத்தகைய தீமையும் உண்டாகுமோ?