Published on 20 May 2026
உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார்.
அறிவை மயக்கும் கள்ளை அறிவுடையோர் உண்ணாது விடுவாராக; நல்லவரால் எண்ணப்படுதலை வேண்டாதவர் மட்டுமே விரும்பினால் கள்ளை உண்பாராக!
நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.
‘கள்’ என்னும் யாவரும் இகழும் பெருங்குற்றத்தை உடையவரை, ‘நாண்’ என்று சொல்லப்படுகின்ற உயர்ந்தவள், பார்ப்பதற்கும் அஞ்சி முகத்தைத் திருப்பிக் கொள்வாள்
உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ளொற்றிக் கண்சாய் பவர்
கள்ளை மறைவாக உண்டு, அதன் களிப்பினாலே தம் அறிவை இழந்தவர்கள், உள்ளூரில் வாழ்பவரால், அவர் மறைவை அறிந்து எள்ளி நகையாடப் படுவர்
கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.
கள்ளுண்பவன், தானுண்ணாதபோது, உண்டு களித்த பிறனைக் காண்பான் அல்லவோ! அப்படிக் காணும் போது, தன் நிலையும் இப்படித்தான் என்று நினைக்க மாட்டானோ?
உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்.
கள்ளின் மேல் ஆசை கொண்ட அரசர்கள், எக்காலத்திலும் பகைவரால் அஞ்சப்படார்; தம் முன்னோரால் அடைந்திருந்த புகழ் என்னும் ஒளியையும் இழந்து விடுவார்கள்
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி.
எது செய்தாலும் உவப்படையும் தாயின் முன்பும் கள்ளுண்டு களித்தல் இன்னாததாகும்; அவ்வாறானால், குற்றம் எதனையுமே பொறாத சான்றோர்களின் முன் என்னவாகும்
கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்.
விளைப் பொருள் கொடுத்து கள்ளுண்டு தன் உடம்பைத் தான் அறியாத நிலையை மேற்கொள்ளுதல், செய்வது இன்னதென்று அறியாத அறியாமை உடையதாகும்.
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.
உறங்கினவர் இறந்தவரை விட வேறுபட்டவர் அல்லர், அவ்வாறே கள்ளுண்பவரும் அறிவுமயங்குதலால் நஞ்சு உண்பவரே ஆவர்.
களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.
கள்ளை உண்டபொழுதே, முன் ஒளித்த குற்றம் மிகுதியாக வெளிப்படுமாதலால், மறைவாகக் கள்ளை உண்டு, ‘யான் உண்டு அறியேன்’ என்று பொய் கூறுவதைக் கைவிடுக
களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ அற்று.
கள்ளுண்டு மயங்கினவனைக் காரணம் காட்டி தெளிவித்தல், நீரின் கீழ் மூழ்கின ஒருவனைத் தீவிளக்கு கொண்டு தேடினாற் போன்றது.