Published on 27 May 2026
கல்வி இல்லாத பெண்கள்
களர்நிலம் அந்நி லத்தில்
புல்விளைந் திடலாம் நல்ல
புதல்வர்கள் விளைதல் இல்லை
கல்வியை உடைய பெண்கள்
திருந்திய கழனி அங்கே
நல்லறிவு உடைய மக்கள்
விளைவது நவில வோநான்!
விளக்கம்
கல்வியறிவு இல்லாத பெண்கள் பண்படாத நிலத்தைப் போன்றவர்கள் . அந்நிலத்தில் புல் முதலானவைதான் விளையலாம். நல்ல பயிர் விளையாது. அதுபோல கல்வி அறிவிலாத பெண்கள் வாயிலாக அறிவுடைய மக்கள் உருவாக மாட்டார்கள். கல்வியைக் கற்ற பெண்கள் பண்பட்ட நன்செய் நிலத்தினைப் போன்றவர்கள். அவர்கள் மூலம் சிறந்த அறிவுடைய மக்கள் உருவாகின்றனர் என்பதை நான் சொல்லவும் வேண்டுமோ?
இந்நாளில் பெண்கட்கு எல்லாம்
ஏற்பட்ட பணியை நன்கு
பொன்னேபோல் ஒருகை யாலும்
விடுதலை பூணும் செய்கை
இன்னொரு மலர்க்கை யாலும்
இயற்றுக! கல்வி இல்லா
மின்னாளை வாழ்வில் என்றும்
மின்னாள் என்றே உரைப்பேன்!
விளக்கம்
இன்று பெண்களுக்கென உள்ள வேலைகளையும் அவர்களின் விடுதலைக்கான செயலையும் பெண்களே செய்தல் வேண்டும். மின்னல்போல் ஒளிரும் இயல்புடையவள் பெண்; ஆனால் கல்வியறிவு இல்லாத பெண் தன் வாழ்வில் என்றும் ஒளிரமாட்டாள் என்றே நான் சொல்வேன்.
உணவினை ஆக்கல் மக்கட்கு!
உயிர்ஆக்கல் அன்றோ? வாழ்வு
பணத்தினால் அன்று! வில்வாள்
படையினால் காண்ப தன்று!
தணலினை அடுப்பில் இட்டுத்
தாழியில் சுவையை இட்டே
அணித்திருந் திட்டார் உள்ளத்(து)
அன்பிட்ட உணவால் வாழ்வோம்!
விளக்கம்
உணவைச் சமைத்துத் தருவது என்பது உயிரை உருவாக்குவது போன்றதாகும். “வாழ்க்கை“ என்பது பொருட்செல்வத்தாலோ வீரத்தாலோ அமைவதன்று. அடுப்பில் நெருப்பு மூட்டி சமைக்கும் கலத்தில் சுவையை இட்டு, அருகில் இருந்து உள்ளத்து அன்போடு உணவு பரிமாறுதலில்தான் வாழ்வு நலம்பெறுகிறது.
-------
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
---பாரதி
-------
மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம்
செய்திடல் வேண்டுமம்மா….
----கவிமணி
--------
பெண்எனில் பேதை என்ற எண்ணம்
இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும்
உருப்படல் என்பது சரிப்படாது
----பாவேந்தர்
No tags available