Thirunelveli

Published on 24 Apr 2026


பழந்தமிழகத்தைச் சேர, சோழ, பாண்டியர் என்னும் மூவேந்தர் ஆண்டு வந்தனர் என்பது நமக்குத் தெரியும். அவர்களுள் பாண்டியர்களின் தலைநகரமாக மதுரை விளங்கியது. அவர்களது இரண்டாவது தலைநகரமாகத் திருநெல்வேலி விளங்கியது.

இந்நகரைச் சுற்றி நெல்வயல்கள் வேலிபோல் அமைந்திருந்ததால்  திருநெல்வேலி எனப்பெயர்பெற்றது.
தற்போது நெல்லை என்று மருவி வழங்கப்படுகிறது. திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி என்று திருஞானசம்பந்தரும், தன்பொருநைப் புனல் நாடு  என்று சேக்கிழாரும் திருநெல்வேலியின் சிறப்பைப் போற்றியுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் மலை வளம் மிகுந்த பகுதியாகும். இப்பகுதியின் சிறப்புமிக்க மலையாகிய பொதிகை மலை இலக்கியங்களில் பாராட்டப்பட்டு உள்ள து.

பொதியி லாயினும் இமய மாயினும்
பதியெழு அறியாப் பழங்குடி
(சிலம்பு 14-15)

என்று இளங்கோவடிகள் பொதிகை மலைக்கு முதலிடம் கொடுத்துப் பாடுகிறார்.

இலக்கியங்களில் திரிகூடமலை என வழங்கப்படும் குற்றால மலை புகழ் பெற்ற சுற்றுலா இடமாகத் திகழ்கின்றது.

வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்
(பாடல் எண் 54)

என்று குற்றால மலைவளத்தைத் திரிகூட இராசப்ப க் கவிராயர் தம் குற்றால க் குறவஞ்சி நூலில் பாடியுள்ளார்.

திருநெல்வேலிப் பகுதியை வளம் செழிக்கச் செய்யும் ஆறு தாமிரபரணி ஆகும். இதனைத் தண்பொருநை நதி என்று முன்னர் அழைத்தனர். இது பச்சையாறு, மணிமுத்தாறு, சிற்றாறு, காரையாறு, சேர்வலாறு, கடனாநதி என்று பல கிளை ஆறுகளாக ப் பிரிந்து திருநெல்வேலியை நீர்வளம் மிக்க மாவட்டமாகச் செய்கிறது.

திருநெல்வேலி மாவட்டப் பொருளாதாரத்தில் முதன்மையான பங்கு வகிப்பது உழவுத்தொழில் .

இருபருவங்களில் நெல் பயிரிடப்படுகின்றது .

இராதாபுரம், நாங்குநேரி, அம்பாசமுத்திரம், தென்காசி போன்ற பகுதிகளில் பெருமளவில் வாழை பயிருடப்படுகின்றது. இங்கு விளையும்  வாழைத்தார்கள் தமிழ்நாடு மட்டுமன்றிக் கர்நாடகம், கேரளம் போன்ற பி ற மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.

நெல்லிக்காய் உற்பத்தியில் தமிழகத்தில் நெல்லை மாவட்டமே முதலிடம் வகிக்கின்றது. கடலோர மற்றும் உள்நாட்டு மீன்பிடித் தொழிலும் இம்மாவட்டத்தில் சிறப்பாக நடைபெறுகிறது.

தாமிரபரணி கடலோடு கலக்கும் இடத்தில் கொற்கை என்னும் துறைமுகம் இருந்தது. இங்கு முத்துக்குளித்தல் சிறப்பாக நடைபெற்றதாகத் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. கொற்கையில் விளைந்த பாண்டி நாட்டு முத்து உலகப் புகழ் பெற்றதாக விளங்கியது.

முத்துப்படு பரப்பிற் கொற்கை முன்றுறை (நற்றிணை 23:6)
கொற்கையில் பெருந்துறை முத்து (அகம் 27:9)

என்று சங்க இலக்கியங்கள் கொற்கையின் முத்துகளைக் கூறுகின்றன. கிரேக்க, உரோமபுரி நாடுகளைச் சேர்ந்தவர்களான யவனர்கள் இந்த முத்துகளை விரும்பி வாங்கிச் சென்றனர்.

அகத்தியர் பொதிகை மலையில் வாழ்ந்தார் என்பர் . சங்க புலவரான மாறோக்கத்து, நப்பசலையார், நம்மாழ்வார் , பெரியாழ்வார் , குமரகுருபரர் , திரிகூடராசப்ப கவிராயர், கவிராசப் பண்டிதர் ஆகியோர் திருநெல்வேலிச் சீமையில் பிறந்து தமிழுக்குச் செழுமை சேர்த்துள்ளனர். அயல்நாட்டு அறிஞர்களான ஜி . யு . போப் , கால்டுவெல் , வீரமாமுனிவர் போன்றோரையும் தமிழின்பால் ஈர்த்த பெருமைக்கு உரியது திருநெல்வேலி.

தாமிரபரணி ஆற்றின் மேற்குக் கரையில் திருநெல்வேலியும் கிழக்குக் கரையில் பாளையங்கோட்டையும் அமைந்துள்ளன. இவ்விருநகரங்களும் இரட்டை நகரங்கள் என அழைக்கப்படுகின்றன. பாளையங்கோட்டையில் அதிக அளவில் கல்விநிலையங்கள் இருப்பதால் அந்நகரத்தை தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்பர்.

முற்காலத்தில் திருநெல்வேலிக்கு வேணுவனம் என்னும் பெயரும் இருந்துள்ளது. மூங்கில்காடு என்பது அதன் பொருளாகும். மூங்கில் நெல் மிகுதியாக விளைந்தமையால்  அப்பகுதிக்கு நெல்வேலி என்னும் பெயர் ஏற்பட்டிருக்கலாம் எனவும் கருதுவர்.

🏷️ Tags:
thirunelveliதிருநெல்வேலி

📰 Related Articles