Published on 26 May 2026
காவிரியின் வருகை
மாவி ரைத்தெழுந் தார்ப்ப வரைதரு
பூவி ரித்த புதுமதுப் பொங்கிட
வாவி யிற்பொலி நாடு வளந்தரக்
காவி ரிப்புனல் கால்பரந் தோங்குமால் (பெரியபுராணம்)
விளக்கம்
காவிரி நீர் மலையிலிருந்து புதிய பூக்களை அடித்துக் கொண்டு வருகிறது. அப்பூக்களில் தேன் நிறைந்திருப்பதால் வண்டுகள் சூழ்ந்து ஆரவாரம் செய்கின்றன. நீர்நிலைகள் நிறைந்த நாட்டுக்கு வளத்தைத் தரும் பொருட்டுக் காவிரி நீர் கால்வாய்களில் பரந்து எங்கும் ஓடுகிறது.
-------
மண்டுபுனல் பறந்தவயல் வளர்முதலின் சுருள்விரியக்
கண்டுழவர் பதங்காட்ட களைகளையுங் கடைசியர்கள்
தண்டரளஞ் சொரிபணிலம் இடறியிடை தளர்ந்தசைவார்
வண்டலையும் குழல்அலைய மடநடையின் வரம்பணைவார் (பெரியபுராணம்)
விளக்கம்
நட்டபின் வயலில் வளர்ந்த நாற்றின் முதலிலை சுருள் விரிந்தது. அப்பருவத்தைக் கண்ட உழவர் இதுதான் களைபறிக்கும் பருவம் என்றனர். அவ்வாறே களைகளைக் களைந்து செல்லும் உழத்தியரின் கால்களில் குளிர்ந்த முத்துகளை ஈனும் சங்குகள் இடறின. அதனால், இடை தளர்ந்து வண்டுகள் மொய்க்கும் கூந்தல் அசையுமாறு மென்மையாக நடந்து அருகில் உள்ள வரப்பினை அடைவர்.
------
கல்லும் மலையும் குதித்துவந்தேன் – பெருங்
காடும் செடியும் கடந்துவந்தேன்;
எல்லை விரிந்த சமவெளி – எங்கும்நான்
இறங்கித் தவழ்ந்து தவழ்ந்துவந்தேன்.
ஏறாத மேடுகள் ஏறிவந்தேன்-பல
ஏரி குளங்கள் நிரப்பிவந்தேன்;
ஊறாத ஊற்றிலும் உட்புகுந்தேன்-மணல்
ஓடைகள் பொங்கிட ஓடிவந்தேன்.
---கவிமணி
No tags available